அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் - ஓர் அலசல் !!

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டக் களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர்
27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்புவிடுத்துள்ளனர். போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜனும், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சு.மூர்த்தியும் கூறும் கருத்துகளை இனி பார்ப்போம்…

தியாகராஜன், ஜாக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர்நாங்கள் சில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச கூட இந்த அரசுக்கு மனமில்லை. எங்களது பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து கடந்த இரண்டு தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது, இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜாக்டோ ஜியோவினால் நடத்தப்பட்ட தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது, தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் 30.11.2017க்குள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்வது குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று நடவடிக்கை மேற்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

ஆக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசும் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த தலைமைச் செயலாளரும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் வேறு வழியின்றி ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நீதி அரசர்கள், IAS அலுவலர்கள், IPS அலுவலர்கள் அனைவரும் 1.6.2016லிருந்து ஊதியக்குழுவின் மாற்றத்தைப் பெற்றுவிட்டனர். ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் 21 மாத நிலுவைத் தொகையினை இந்த அரசு வழங்காமல் வந்திருக்கிறது. எனவே, வேறு வழியின்றி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.

வரக்கூடிய நவம்பர் 27 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை நடத்தயிருக்கிறோம். அதற்கு ஆயத்தமாக அக்டோபர் 4 ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை எடுத்து போராடியிருக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை, இவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசு அடக்குமுறைகளை கையாளாமல் உடனடியாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் போராட்டங்கள் இதைவிட தீவிரமடையும்.

 சு.மூர்த்தி, ஆசிரியர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்ஆசி  நரியர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெறுவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. உரிமைகள் அனைத்தும் வாழ்வதற்காகத்தான் கேட்கப்படுகின்றன. நம்மை ஆள்வதற்காக நாம் தேர்வு செய்த ஆட்சியாளர்களிடம்தான் நமக்கான உரிமைகளைக் கேட்டுப் போராடவும் முடியும்.

ஆனால், இங்கு ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் அவரவருக்கான உரிமையை  மட்டும் கேட்டுப் போராடுவதோடு முடிந்துபோவதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உறுப்பினனாகவும் சமூகத்தில் வாழும் பிறரால் பயனடைபவனாகவும் பிறருக்கு பயனளிப்பவனாகவும் இருக்கிறான். இதன் காரணமாகவே, பொது நலனுக்கான போராட்டத்திற்கு பங்களிப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால், இக்கடமைகளைச் செய்தே ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

வாழ்நாள் முழுதும் பயனளிக்கும் அழியாத கல்வியைப் பெற ஆசிரியர்கள் துணை செய்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சமூகம் நன்றிக்கடன் செலுத்துவது நியாயமே. அதேசமயம், சமூகத்திற்கும் ஆசிரியரின் கடமை தேவையென சமூகம் எதிர்பார்க்கிறது. அதனால் தான், ஆசிரியர்கள் மட்டுமே ‘சமூகச் சிற்பிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். வகுப்பறையில் எழுத்தறிவிக்கும் வேலையைச் செய்வது, கொடுக்கப்பட்ட பாடநூல்களில் உள்ள பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது என்ற அளவில் மட்டும் ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து
விடுவதில்லை.

நாம் இன்றைக்கு மக்களாட்சி முறை சமூக அமைப்பில் வாழ்கிறோம். மக்களாட்சி சமூக அமைப்பு என்பது தனிநபரைப் பாதுகாப்பதோடு, மக்களிடையே சமத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு அவசியமான வழிமுறையாகும்.

மேலும், ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கல்வியின் பங்கே முதன்மையானது. இன்றைய தனியுைடமை சார்ந்த சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பிலான வாழ்நிலையில் மக்களாட்சி சமூக அமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் கல்வியின் பங்கு மிகவும் முதன்மையாகிறது. கல்வியின் பங்கை நிறைவேற்றுவது ஆசிரியர்களின் செயல்பாடுகளில் உள்ளது.  

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மரணிக்க வைக்கிறோம் என்றால், நாம் ஜனநாயகத்தின் எதிர்த்திசையில் செல்கிறோம் என்று பொருள். அரசுப் பள்ளிகளைக் காக்கின்ற கடமையும் ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கடமைதான். ஆசிரியர் இயக்கங்கள் இக்கடமையை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்ளவேண்டும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை ஆசிரியர்களும் மறந்துவிடக்கூடாது.

  - தோ.திருத்துவராஜ்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022