கஜா புயலால் அடித்துவரப்பட்ட மர்ம பொருள் : ஆய்வு செய்யும் அதிகாரிகள்?

கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்ட மக்கள் இதில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு, உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்த புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில் விலங்குகள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மர்மப் பொருள் ஒன்று கஜா புயலால் கரை ஒதுங்கியுள்ளது.
புதுச்சேரி காலாப்பேட் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து கடலோரக் காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கப்பல் செல்ல வழிகாட்டியாக பயன்படும் போயோ மோரிங் என்ற உருளையாக இருக்கக் கூடும் என்பது சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அந்த பொருள் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.