குழந்தைகளின் கனவை அவர்களே காணட்டும் - ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய தினமணி கட்டுரை

பள்ளிக்கூடங்களில் ஆண்டுத் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் துரித கதியில் மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்ய முனைப்புடன் செயல்படுகிறது. அதிகாலையில் சிறப்பு வகுப்புகளுக்கும், கூடுதல் வகுப்புகளுக்கும் செல்லும் மாணவர்களைப் பார்க்கும்பொழுது, ஒருபுறம் இவ்வளவு
வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்று தோன்றினாலும் இந்தக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்தைச் சந்திக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
2014 முதல் 2016 வரை இந்தியாவில் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துக்கொண்டு வருவதாக அரசே தெரிவித்துள்ளது.
மாணவர்களின் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில் 8,068 மாணவர்களும் 2015-ஆம் ஆண்டில் 8,934 மாணவர்களும் 2016-ஆம் ஆண்டில் 9,4 74 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது. 14 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய குற்றவியல் ஆவணக்காப்பகத் தகவல் கூறுகிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு, மனஅழுத்தம், கல்விச்சூழல், போட்டிச்சூழல், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவையே காரணங்களாக கூறப்படுகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வும், போட்டித் தேர்வுகளுக்கான போட்டி அதிகரிப்பதனால் ஏற்படும் அழுத்தமும் மாணவர்களை மிகுந்தஅளவில் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தெளிவையும் அறிவையும் தந்து, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க வேண்டிய கல்விமுறை, அவர்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கித் தற்கொலை செய்யத் தூண்டுவது மிகுந்த வேதனையான நிலை. இந்தியாவின்அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு நாளும் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய கல்வி முறையுடன் மாணவர்களால் இயைந்து பயணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. கல்வி, திணிக்கப்படும் எந்திரத்தனமான ஒன்றாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டுடன் கூடியதாகவும் சுமைகள்அற்றதாகவும் இருக்கவேண்டும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில், கல்வி வணிகமயமாகிவிட்டதோடு, மதிப்பெண் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டுவிட்டதும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணமாகும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வணிக மயமாகி விட்ட கல்வி அமைப்பில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இயலாததன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வறுமையுற்ற குடும்பங்களில் குழந்தைகளின் நிலை இப்படி இருக்க, வசதி படைத்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
அவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பைத் தாண்டி வேறு கலைகளையோ விளையாட்டுப் பயிற்சியையோ மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதற்கு தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதையும் கூடபொருட்படுத்தாமல் பெற்றோர் தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்.
நடனம் கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தையை, ஓவியம் கற்றுக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். இசையைக் கற்றுக் கொள்ள விரும்பும் குழந்தை, கட்டாயத்தின் பேரில் நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி பள்ளிக்கல்வி ஒருபுறம் இவர்கள் மனஅழுத்தத்திற்கு காரணமாக இருக்கும்பொழுது, அதனைத் தாண்டியும் செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் பல்துறை அறிவை பெறவேண்டும் என்னும் பெற்றோரின் பேராசையினால் அதிகசிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் பெற்றோரிடம் ஓர் எண்ணம் மேலோங்கி இருக்கிறது. எவ்வளவு பணம் செலவழித்தாவது தங்கள் பிள்ளைகளைப் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் படித்து முடித்தவுடன் மென்பொருள் நிறுவனங்களில் பணியில் அமர்ந்து பெரும் வருமானத்தை அமெரிக்க டாலர்களில் ஈட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனையே செயல்படுத்தவும் துணிகின்றனர். தன் பிள்ளைக்கு அந்தக் கல்வியும் வேலையும் பிடித்தமானதுதானா என்று அவர்கள் நினைப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் நூறு சதவீத தேர்ச்சிக்காகவும், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி என்ற பெயரோடு மறு ஆண்டு மாணவர்சேர்க்கையை மனதில் கொண்டும் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றனர். அதே நேரத்தில், பெற்றோரும் அவர்களுக்கு விருப்பமான பாடங்கள் குறித்து அறியாமல், சில குறிப்பிட்டபாடங்களைத் தேர்ந்து கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறார்கள்.
பின்னர், முழு மதிப்பெண் பெறுவதற்கு அவர்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொடர்ந்து அன்றாடத் தேர்வு, வாராந்திரத் தேர்வு என்று மாணவர்கள் மீண்டும் மீண்டும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த மன அழுத்தமே காலப்போக்கில் மனச் சோர்வாக மாறிவிடுகிறது. மனச் சோர்வு கொண்ட குழந்தைகள் பலவீனப்பட்டு போகிறார்கள். இதனால் சிலர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வெறுப்புணர்வும் விரக்தியும் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனஉறுதியை, வாழ்க்கையை கற்றுத் தர வேண்டிய கல்விக்கூடங்களும் கல்வி முறையும் அவர்களை மரணத்தை நோக்கி நகர்த்துவது ஒரு சமூகத்தின் மீதான சாபம்.
பள்ளிக்கூடங்கள், மாணவர்களின் விருப்பம் என்ன, அவர்கள் எதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படுவவதே இல்லை. தங்கள் பள்ளிக்கூடம் நூறு சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்பது மட்டுமே பள்ளிகளின் நோக்கமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் மாணவர்களை நடத்துவது ஒரு தனி கலை. அவர்களை அதட்டி மிரட்டி பணிய வைக்க முடியாது. பாடத்திட்டம் மாறிக் கொண்டே இருப்பதைப் போல மாணவர்களை கையாள்வதற்கான பாடத்திட்டமும் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மையோடு அல்லது ஒரே அறிவுக் கூர்மையோடு இருந்து விட இயலாது. ஒரு குழந்தைக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். மற்றொரு குழந்தை படிப்பில் ஆர்வம் குறைந்து இருந்தாலும் வேறு சில செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கும். இப்படி வேறுபட்ட அறிவுத்திறனும் செயல்பாடும் விருப்பமும் கொண்ட குழந்தைகளை ஒரே இடத்தில் அடைத்து ஒரேவித தேர்வு முறையை, ஒரே வித கல்வியைத் தந்துஅவர்களை சிரமப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.
எந்தக் குழந்தைக்கு எதில் விருப்பம் அதிகமோ அதனைக் கற்றுக் கொள்வதற்குக் களம் அமைத்துத் தரவேண்டியது பெற்றோரின் கடமை. எல்லாவற்றுக்கும் அரசை நோக்கிக் கைகாட்டுவதில் அர்த்தமில்லை. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு கொண்டவர்கள் பெற்றோரே.
பிள்ளைகளின் வருங்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும் என்று கருதுவதில் தவறில்லை. ஆனால் அத்தகைய எதிர்காலம் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற நம்பிக்கை கொண்டிருப்பதும், அக்கம் பக்கத்தார், உறவினர்களின் குழந்தைகள் இருப்பதைப் போலவே நம்முடைய குழந்தைகளும் இருக்கவேண்டும் என்றுஎண்ணுவதும் முற்றிலும் தவறானது.
நம் குழந்தைகள் ஆரோக்கியத்துடனும் நல்லொழுக்கத்துடனும் வாழவேண்டும் எனும் சிந்தனை மேலோங்கவேண்டும். பணக்காரர்களாய் வாழ்வதுதான் வாழ்வின் லட்சியம் என்று கருதும் பெற்றோர்களே குழந்தைகளின் சில கொடூர முடிவுகளுக்குக் காரணம் என்பதை மறுத்துவிட இயலாது.
நல்லபடியாக வாழ, பிள்ளைகளுக்குத் தேவை, கணினி தொழில்நுட்பமோ, வெளிநாட்டு உத்தியோகமோ, டாலர்களில் வருமானமோ அல்ல. அவர்களிடம் நாம் தரும் வாழ்வின் மீதான நம்பிக்கையும், திருப்திகரமான மனநிலையும் மட்டுமே. எத்தனையோ காலங்களாய் அறிவிற் சிறந்த தலைமுறைகள் இந்த மண்ணில் தழைத்திருக்கின்றன. நம் பிள்ளைகளும் அத்தகைய தலைமுறையின் நீட்சியே என்பதை பெற்றோர்கள் நம்பத் தொடங்க வேண்டும்.
பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் கனவு காணும் உரிமை உண்டு. குழந்தைகளின் கனவுகளை குழந்தைகளே காணட்டும். அந்தக் கனவை நோக்கி அவர்கள் பயணிக்கட்டும். அந்தப் பயணத்தில் பக்க பலமாக, வழித்துணையாக நாமும் தொடரலாம். அப்போது சமூகம் உயரிய பாதையில் நடைபோடும்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank