பள்ளி அளவில் மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு!
விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை குறைக்க 100
அரசு பள்ளிகளில் மாணவர் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒரு பாடத்திற்கு 5 பேர் என தனி குழு அமைக்க வேண்டும். இம்மாணவர் குழுவினர் ஏதாவது ஒரு தலைப்பில் 'பிராஜெக்ட்' உருவாக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கணிதம் பாடத்தில் 'அல்ஜிப்ரா' கடினமாக இருக்கும். அவற்றை எளிதாக விடைகாணும் வகையில் பிராஜெக்ட் தயார் செய்திடலாம்.
இது தவிர சமூகம், குடும்பம், வீடு, உணவு போன்ற ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல மற்றும் தீய அம்சங்களை அதில் விவரிக்க வேண்டும்.
பிராஜெக்ட் வழிகாட்டுதலுக்கு பள்ளிவாரியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுக்கள் டிசம்பருக்குள் பள்ளி அளவில் பிராஜெக்ட் வழங்கி, ஜனவரியில் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் சிறந்த பிராஜெக்ட்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை அமல்படுத்தவும் அரசு நடைமுறைப்படுத்தும்.
இதுபோன்றவற்றில் மாணவர்கள் ஈடுபாடு அதிகரித்தால் இடைநிற்றல் குறைந்து சமூகத்திற்கு பயனுள்ள வரைவு திட்டம் கிடைக்கும்,' என்கின்றார்.