"ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை மெதுவாக மூடப்பட்டு வருகிறது" - ஐ.நா. தகவல்
ஓசோன் படத்தில் ஏற்பட்ட துளை மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு மாறும் என ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியை அடைந்தால் அதன் மூலம் உயிரினங்களுக்கு டி.என்.ஏ. குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து பூமியில் வாழும் உயிர்களைக் காக்கும் வகையில் ஓசோன் படலம் உள்ளது.
இந்த வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது. இந்த குளோரோ புளூரோ கார்பன் பிரிட்ஜ், ஏசி போன்ற மின் சாதனங்களில் இருந்து அதிகம் வெளிவருகின்றன. இந்த வாயு ஓசோன் பாதிப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது.
இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவிதுள்ளது.