CBSE : மறுமதிப்பீடு செய்ய தனி முறை!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பக்கத்துக்கு ரூ.2 கட்டணமும், விண்ணப்பக் கட்டணமாக 10 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான உடனே, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களைச் சரிபார்க்க விரும்புவது வழக்கம். மீண்டும் தேர்வு எழுதும் நோக்கம் கொண்ட மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவர். இதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடைத்தாள் நகல் சரிபார்க்கத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக, பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக, சிபிஎஸ்இ விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விடைத்தாள் நகல் பெறுவதற்காக சிபிஎஸ்இ வைத்துள்ள நடைமுறைகள் தனியாக உள்ளது என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடைத்தாள் நகல் பார்க்க விரும்பும் மாணவர்கள் பக்கத்துக்கு 2 ரூபாயும், விண்ணப்பக் கட்டணம் 10 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தனித்தனி செயல்முறைகள் என்றும், இதை சிபிஎஸ்இ ஒருங்கிணைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.