பெண்கள் பாதுகாப்பாக Cell Phone பயன் படுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி நமது நாட்டில் 53 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பல்வேறு வசதிகளை வாரி வழங்கும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்துகளும் அதிகம். அதிலும் பெண்களே ஸ்மார்ட்போன்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


ஸ்மார்ட்போன் என்பது அதனை பயன்படுத்துபவருக்கு சிறந்த நண்பனாக விளங்குகிறது என்றால், அவர்களை ரகசியமாக உளவுபார்க்கும் உளவாளியும் அதுவே என்றால் அது மிகையாகாது.



தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு செயலி மூலம் 80 பெண்களை ரகசியமாக கண்காணித்து அவர்களின் அந்தரங்கத்தை திருடி வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்தார் என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.


ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களுக்கு முழுமுதற்காரணம் பெண்கள் அவர்களின் ஸ்மார்ட்போனை பிறரின் கையில் கொடுப்பது. இதுவே பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒருவர் உங்களை ரகசியமாக கண்காணிக்க நினைத்தால் ஒரு செயலி (ஆப்) மூலம் நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?


பெண்களை கண்காணிப்பதற்கான பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கின்றன. அதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா, போன் கால்கள், குறுஞ்செய்திகள், இருப்பிடம் மற்றும் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்க முடியும்.


இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கண்காணிக்கும் செயலி, உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஆன் செய்து விடும் என்பது தான். அதிலும் கேமரா ஆன் ஆகி இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. இதுபோன்ற செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் மறைத்து வைக்கவும் முடியும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போனில் கண்காணிக்கும் செயலிகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று.



பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் ஏதேனும் செயலிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள "பிரி ஸ்பைவேர் ஆன்டு மால்வேர் ரீமுவர்" என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலி மூலம் ஸ்மார்ட்போனை முழுவதும் ஸ்கேன் செய்தால் ஏதேனும் கண்காணிக்கும் செயலி இருந்தால் காட்டிவிடும்.



நம் ஸ்மார்ட்போனை யாரிடமும் கொடுக்கவில்லை என்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் போது அது கேட்கும் அனுமதி அனைத்திற்கும் படித்து பார்க்காமல் 'ஐ அக்ரி' என்பதை கிளிக் செய்துவிடுகிறோம். இது நம்மை அறியாமல் நாமே நமது தகவல்கள் திருட வழி ஏற்படுத்தி விடும். இது மிக பெரிய தவறு.



ஒரு செயலி நமது ஸ்மார்ட்போனில் எதனையெல்லாம் அனுமதி கேட்கின்றது என்று கவனிக்காமல் ஐ அக்ரி என்பதை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்வதால் அந்த செயலியை உருவாக்கியவர் உங்களை கண்காணிக்க முடியும் மற்றும் உங்களை பற்றிய தகவல்களை உங்கள் அனுமதியுடன் திருடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.



ஒரு செயலி கேட்கும் அனுமதிகளை படித்து பார்த்தாலே அது எவ்வளவு ஆபத்தான செயலி என்பதை உணர முடியும். மேலும் அந்த செயலியை உருவாக்கியவர் முதலிலே அவர்கள் என்ன தகவல்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து எடுக்கிறார்கள் மற்றும் அதனை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக அவர்களின் பிரைவசி பாலிசியில் கூறிவிடுவார்கள். ஆனால் அதையும் நாம் கவனிக்காமல் இன்ஸ்டால் செய்கிறோம். இது நமக்கும், நம் ஸ்மார்ட்போனுக்கும் பாதுகாப்பு இல்லை.



கூகுள் ப்ளே ஸ்டோரில் பல போலியான மற்றும் ஆபத்தான செயலிகளும் கொட்டிக்கிடக்கின்றன. முதலில் ஒரு செயலி பதிவிறக்க செய்யும் முன் அந்த செயலியின் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை பார்க்க வேண்டும். ஏனென்றால் அதனுடைய ரேட்டிங் வைத்து அதனை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.



ரிவ்யூ மூலம் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியவரின் கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் டெவலப்பர்ஸ் பெயரை கவனியுங்கள். டெவலப்பர்ஸ் பெயர் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.



பெண்கள் தங்களின் ஸ்மார்ட்போனை பழுது நீக்க கொடுக்கும் போது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து, பின்னர் அவற்றை நீக்கி இருப்பீர்கள். ஆனால் மென்பொருள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டு எடுத்துவிட முடியும்.



எனவே ஸ்மார்ட்போனை பழுது நீக்குபவர்கள் அது பெண்ணின் ஸ்மார்ட்போனாக இருந்தால் அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்க வாய்ப்பு இருக்கிறது.



பெண்களுக்கு இத்தனை இன்னல்களை தரும் ஸ்மார்ட்போனால் அவர்களுக்கு ஒரு சில பயன்களும் இருக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறார்கள் சில விஷக்கிருமிகள். கண்களுக்கே தெரியாத சிறிய ரகசிய கேமராவெல்லாம் வந்துவிட்டது.



பெண்கள் ஓர் இடத்துக்கு சென்றால் அங்கே ஏதேனும் கேமரா இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தால் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அதனை கண்டுபிடித்து விடலாம். கூகுள் ப்ளே ஸ்டாரில் "ஹிட்டன் கேமரா டிடெக்டர்" என்று செயலி கிடைக்கிறது. ரகசிய கேமரா இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் அந்த இடத்தில் இந்த செயலியை பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், ஏதேனும் சிறிய ரகசிய கேமரா இருந்தால் கூட பிப் சத்தத்தை எழுப்பும். அதை வைத்து எளிதாக அந்த இடத்தில் கேமரா இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.


இந்த செயலியை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டியது அவசியம். இன்றைக்கு பெண்கள் அவர்களுடைய ஸ்மார்ட்போனில் ஏராளமான செயலிகளை வைத்திருப்பார்கள். மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டிய செயலி "பீ சேப்" என்ற செயலி. இது பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ள போது உதவும்.



எந்த ஒரு தொழில்நுட்பத்திலும் உள்ள ஆபத்தினால் அதனை கைவிடுவது அறியாமை ஆகும். அதனை விழிப்புணர்வுடனும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது நமது கைகளில் தான் இருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. அதனை பயன்படுத்தும் நாம் தான் பாதுகாப்பற்ற மற்றும் விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank