ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன் ?
காற்று வெளியில் மேலே செல்லச் செல்ல, ஓசோன் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளது. புவிக்கு அருகிலும் கூட மிகக் குறைந்த அளவில் அது உள்ளது.
இருப்பினும் காற்று வெளியில் தரையிலிருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை உயரமுள்ள பகுதியில் ஓசோன் மிக அதிகமாகச்
செறிந்திருக்கிறது. இப்பகுதிக்கு ஓசோன் படலம் என்று பெயர். மூன்று உயிவளி (oxygen) அணுக்கள் ஒருங்கிணையும்போது ஒரு ஓசோன் மூலக்கூறு உருவாகிறது. சாதாரணமாக உயிவளி அணுக்கள் இரண்டிரண்டாக இணைந்து உயிர்வளி மூலக்கூறுகளாக விளங்கும்.
காற்று வெளியின் மேற்பகுதியில் உயிர்வளி மூலக்கூறுகள் கதிரவனின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சினால் தாக்குறும்போது அவை பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்து ஓசோன் படலத்திற்குக் கீழே புவிக்கு அருகிலும் உயிர்வளி மிகுதியாக உள்ளது என்பது உண்மையே. கதிர்வீச்சினால் உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாகப் பிளவுறும் வாய்ப்பும் அதனால் இங்கும் ஓசோன் மூலக்கூறுகள் உருவாகும் நிலைமையும் ஏற்படாதா என ஐயம் எழலாம்.
கதிரவனின் கதிர்கள் காற்று வெளியில் நீண்ட தூரம் வரவேண்டியிருப்பதால் ஆற்றல் குறைந்து அதனால் உயிர்வளி மூலக்கூறுப் பிளவும் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும் இதனால் ஓசோன் மூலக்கூறுகளும் குறைவாகவே உருவாகின்றன. மேலும் ஓசோன் படலத்திலும் கூட உருவாகும் ஓசோன்கள் அவ்வாறே இருப்பதில்லை. கதிர்வீச்சின் காரணமாக ஓசோன் மூலக்கூறுகளும் அணுக்களாகப் பிளவுற்று உயிர்வளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. மீண்டும் உயிர்வளி மூலக்கூறுகள் பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உருவாகின்றன.
இவ்வாறு ஓசோன்/உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாக மாறிமாறிப் பிளவுற்று, ஒருங்கிணைவதால் ஓசோன் படலத்தில் ஓசோன் செறிவு ஏறக்குறைய சமமான அளவில் மாற்றமின்றி அமைவதுடன், அது ஓசோன் படலத்திற்குக் கீழே இறங்கிச் செல்வதும் தவிர்க்கப்படுகிறது.