Whatsapp, Skype-ற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா?

வாட்ஸ்அப், வீசாட், ஸ்கைப் போன்ற OTT சேவைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறது ட்ராய். இது எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

 வாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்... ட்ராயின் முடிவு சரியா? #OTTRegulations 
வாட்ஸ்அப், ஸ்கைப், ஹைக் போன்ற OTT பிளாட்ஃபார்ம் சேவைகளுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோலவே புதுக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது ட்ராய். இதுதொடர்பாக கடந்தவாரம் Consultaion Paper-ஐ வெளியிட்டிருக்கும் ட்ராய், தற்போது நிறுவனங்களின் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறது. ஒருவேளை OTT பிளாட்ஃபார்ம்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் மெசஞ்சர் வரை அனைத்து ஆப்களிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். வாட்ஸ்அப் போலவோ, ஹைக் போலவோ புதிதாக இனி எந்தவொரு ஆப்பும் வரமுடியாத நிலைகூட வரலாம். எதற்காக இப்படியொரு முடிவை எடுக்கவிருக்கிறது ட்ராய்?
நெட் நியூட்ராலிட்டியில் தொடங்கிய பிரச்னை!

OTT பிளாட்ஃபார்ம்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான சர்ச்சை இப்போது அல்ல; 2015-லேயே தொடங்கிவிட்டது. அந்த வருடம் முதன்முதலில் ஏர்டெல் நிறுவனமானது ஸ்கைப், வைபர் போன்ற VoIP சேவைகளுக்குத் தனிக் கட்டணங்கள் நிர்ணயித்தது. அதாவது வாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா பேக் வைத்திருந்தாலும் கூட, அந்த டேட்டாவில் இந்த VoIP சேவைகளைப் பயன்படுத்த முடியாது. மாறாக, இதற்கெனத் தனி ரீசார்ஜ்தான் செய்யவேண்டும். இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அடுத்ததாக அதே வருடம் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் ஆனது, இந்தியாவின் இணையவசதி இல்லாத இடங்களில் இலவச இணையச் சேவையை வழங்குவதற்காக Internet.org எனும் திட்டத்தைச் செயல்படுத்தியது. Free Basics என அழைக்கப்பட்ட இந்தத் திட்டம் மூலமாக குறிப்பிட்ட சில இணையதளங்கள் மட்டும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். நெட் நியூட்ராலிட்டிக்கு எதிராக இருந்த இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்க்க, இறுதியில் இது கைவிடப்பட்டது. இதேபோல ஏர்டெல் நிறுவனமும் குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் ஏர்டெல் ஜீரோ எனும் திட்டத்தை அறிவித்து, அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படி நெட் நியூட்ராலிட்டி, ஜீரோ ரேட்டிங், OTT சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்துப் பிரச்னைகளும் ஒருங்கே கிளம்பவே அனைத்துக்கு எதிராகவும் அடுத்தடுத்து ட்ராய் புதுப்புது விதிமுறைகளை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில இணையதளங்களுக்கு மட்டும் முன்னுரிமை தரும் ஜீரோ ரேட்டிங், நெட் நியூட்ராலிட்டி ஆகிய இரண்டு பிரச்னைகளும் முடிவுக்கு வந்தன. ஆனால், OTT சேவைகளுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயான தகராறு மட்டும் தீரவில்லை. தற்போது அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்தப் புதிய ஆலோசனை அறிக்கை மூலம் மீண்டும் `பஞ்சாயத்தைக்' கூட்டியிருக்கிறது ட்ராய். சரி, இவர்களுக்குள் என்ன பிரச்னை?

வாட்ஸ்அப்
2013-14 வரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய பிரச்னைகள் எதுவுமில்லை. அதற்கு முந்தைய வருடம் உச்சநீதிமன்றம் 122 அலைக்கற்றை ஒப்பந்தங்களைச் செல்லாது என அறிவித்தது மட்டும்தான் அப்போது டெலிகாம் துறையில் ஏற்பட்ட பெரும் அதிர்வு. ஆனால், அதற்கடுத்த வருடங்களில் அதைவிடவும் பெரிய அதிர்வுகள் உண்டாகின. கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்த மொபைல் இன்டர்நெட், டெலிகாம் நிறுவனங்களின் வருவாயில் நேரடியாகக் கைவைத்தது. அதுவரைக்கும் டெலிகாம் நிறுவனங்களின் வருமானத்தில் பெரும்பங்கு வகித்த எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. மாறாக மொபைல் இன்டர்நெட் பயன்பாடும், அதன்மூலம் வந்த வருவாயும் பெருகியது. இதைத் தொடர்ந்து வாய்ஸ் கால்களில் விட்ட லாபத்தை, டேட்டா பேக்குகளின் விலை மூலம் ஈடுகட்டின இந்நிறுவனங்கள். ஆனால், 2016-ல் வந்த ஜியோ அதற்கும் முடிவுகட்டியது. குறைவான விலையில் அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் சேவைகளை அள்ளி வழங்கவும், பிறநிறுவனங்களும் தங்கள் விலையைக் குறைக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின. இதனால் மீண்டும் டெலிகாம் நிறுவனங்களின் வருவாயில் பலத்த அடி விழுந்தது. இந்த நெருக்கடியால் இந்திய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இன்று இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களிடையேதான் போட்டி. இதுபோக அரசின் பி.எஸ்.என்.எல் சேவை. இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டண விவரங்களை மாற்றுவது, வேலிடிட்டி பேக்குகளை அறிமுகப்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. இது ஏன், எதனால் என்பதை முன்பே பார்த்தோம். சரி, இப்போது OTT சேவைகளை ஏன், டெலிகாம் நிறுவனங்கள் எதிர்க்கின்றன எனப் பார்ப்போம்.

ஏற்கெனவே பார்த்தது போல வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்றவை டெலிகாம் நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கிறது என்பதுதான் முதல் காரணம். இன்றைக்கு இந்தியாவில் டெலிகாம் சேவை வழங்குவதற்கான ஒரு நிறுவனம் தொடங்கப்படும் என்றாலோ, நடத்தவேண்டும் என்றாலோ, நிறைய விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். உதாரணமாக, அரசிடம் அனுமதி வாங்குவது, அலைக்கற்றைகளை ஏலம் எடுப்பது, ட்ராயின் ஒழுங்குமுறைகள், அரசின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடப்பது எனப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், OTT சேவைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. OTT சேவை என்பது என்ன? இணையம் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளுமே OTT (Over The Top) சேவைகள்தாம். இன்று மொபைலில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், மெசஞ்சர், ஃபேஸ்புக், அமேசான் பிரைம், ஃப்ளிப்கார்ட், பேடிஎம் போன்ற அத்தனையுமே OTT-க்குள் அடங்கும். ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் குற்றம்சாட்டுவது இவையனைத்தையும் அல்ல; VoIP (Voice over Internet Protocol) எனப்படும் இன்டர்நெட் டெலிபோன் சேவையை வழங்கும் நிறுவனங்களை மட்டும்தான். உதாரணமாக, வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் வாய்ஸ்கால் இரண்டும் டெலிகாம் நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ் மற்றும் வாய்ஸ்கால் சேவையைப் பாதிப்பது; ஸ்கைப், வைபர், மெசஞ்சர் போன்ற அனைத்தும் இதேபோலத்தான். இப்படி டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளைப் போலவே, வேறு சேவைகளை வழங்கும் OTT சேவைகளை மட்டும்தான் குறிவைக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். தற்போது ட்ராயும் `OTT services as can be regarded the same or similar to the services provided by Telecom Service Providers' என்ற அடிப்படையில் இவற்றுக்கு மட்டும்தான் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா எனக் கேட்டிருக்கிறது. இது முதல் பிரச்னை.
ட்ராய்யின் புது கட்டுப்பாடுகள் சரியா?

இரண்டாவது இந்த OTT சேவைகளின் பிசினஸ் மாடல். டெலிகாம் நிறுவனங்களின் சேவைகள் அனைத்துமே அதன் உள்கட்டமைப்புகளைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டுக்கும் டெலிகாம் நிறுவனங்கள்தாம் டவர்களையோ, கேபிள்களையோ உருவாக்க வேண்டும். அலைக்கற்றைகளை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால், OTT நிறுவனங்களுக்கு இப்படியில்லை. உதாரணமாக வாட்ஸ்அப்பை எடுத்துக்கொண்டால், வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் டேட்டாவைப் பராமரிப்பது, சர்வர்களில் கையாள்வது போன்ற பணிகளை மட்டும்தான் அந்நிறுவனம் செய்யும். சேவையைப் பயன்படுத்துவதற்கு டெலிகாம் நிறுவனங்களின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்தும். சேவைகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கென பிரத்யேகமாக அவர்களிடம் எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. இப்படி எங்கள் நெட்வொர்க்கையே பயன்படுத்தி, எங்களுக்குப் போட்டியாகவே OTT நிறுவனங்கள் இயங்குவது சரியா எனக் கேட்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்.

இப்படி ஒரே சேவையை ஒரு நிறுவனம் கடும் கட்டுப்பாட்டுடனும், பொருட்செலவுடனும், இன்னொரு நிறுவனம் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றியும் வழங்க ட்ராய் அனுமதிப்பது சரியா என்பதுதான் டெலிகாம் நிறுவனங்களின் வாதம். இதற்கு மாற்றாக டெலிகாம் நிறுவனங்கள் கேட்பது, ``OTT சேவைகளுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டுவர வேண்டும்; அவற்றை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும்; இல்லையெனில், டெலிகாம் நிறுவனங்களுக்கு OTT சேவைகள் பணம் செலுத்தவேணும் வழிசெய்யவேண்டும்" என்பதைத்தான். இதை மட்டும் வைத்துப்பார்த்தால் டெலிகாம் நிறுவனங்களின் வாதம் முழுவதும் சரி என்பது போலத்தான் தோன்றும். ஆனால், இன்னொருபுறம் இந்த விதிமுறைகள் எதுமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் வைத்துப்பார்க்க வேண்டும்.

Airtel Jio Vodafone

டெலிகாம் நிறுவனமானது முதன்மையாக இரண்டு விதமான சேவைகளை வழங்குகிறது. முதலாவது, வாய்ஸ்கால் / எஸ்.எம்.எஸ் போன்ற தொலைத்தொடர்பு சேவைகள். இரண்டாவது, மொபைல் இன்டர்நெட் எனப்படும் இணைய சேவை. இந்த இணைய சேவையின் கீழ்தான் VoIP சேவைகளாக வாட்ஸ்அப், ஸ்கைப் அனைத்தும் வரும். இதில், ட்ராய்யின் பணி என்பது மொபைல் நிறுவனங்களின் பணிகளைப் பராமரிப்பது, பிரச்னைகளைத் தீர்ப்பது, அவர்களுக்கான அலைக்கற்றைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது போன்றவை மட்டும்தான். மாறாக, வாட்ஸ்அப், மெசஞ்சர், ஸ்கைப் போன்றவற்றின் சேவைகளை கட்டுப்படுத்துவதோ, ஒழுங்குபடுத்துவதோ அல்ல; அப்படியெனில் ட்ராய் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியுமா அல்லது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைதான் இதில் முடிவெடுக்க வேண்டுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. அடுத்த சிக்கல், இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம். உதாரணமாக, OTT சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தால் அந்நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையைச் சந்திக்கும். இது மக்களிடமே தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாவது, இந்த லைசென்ஸ் முறையானது புதிய ஸ்டார்ட்அப்கள் எதுவும் OTT விஷயத்தில் ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். அடுத்தது, இந்த VoIP சேவைகளானது வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் மட்டுமல்ல; கேமிங்கில் கூட சாட்டிங் ஆப்ஷன் இருக்கிறது. அப்படியெனில் அந்த சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும் அல்லது கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு இன்று கிடைக்கும் கேமிங் மற்றும் சாட்டிங் அனுபவமே பாதிக்கப்படலாம்.
இதேபோல OTT நிறுவனங்கள் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, அவை எவ்விதமான சட்டவிதிகளுக்கும் உட்படவில்லை என்பது. ஆனால், அதையும் மறுக்கின்றன இந்நிறுவனங்கள். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் படி பாதுகாப்பு விஷயத்தில் ஏற்கெனவே OTT நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவையே போதுமே என்பது இவர்கள் வாதம். மேலும், OTT நிறுவனங்கள் டெலிகாம் மீது வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு இன்று டெலிகாம் நிறுவனங்களே தங்கள் எல்லையைத் தாண்டி பிற OTT சேவைகளை வழங்குகின்றன. உதாரணமாக ஏர்டெல் டிவி, ஜியோ சினிமா போன்றவை. இப்போது VoIP சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அடுத்து பிற OTT சேவைகளுக்கும் பரவும்போது டெலிகாம் நிறுவனங்களின் OTT சேவைகள் முன்னுரிமை பெறலாம். இதுவும் தவறுதானே என்பது எதிர்தரப்பு வாதம். சரி, அப்படியென்றால் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

இன்டர்நெட்

இந்தியாவுக்கு முன்னதாகவே இந்த OTT Vs டெலிகாம் சண்டை பிறநாடுகளில் தொடங்கிவிட்டது. இதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரான்ஸ், இந்தோனேஷியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அந்தந்த நாட்டின் தன்மைக்கேற்ப விதிமுறைகளையும் வகுத்துள்ளன. இதேபோல ட்ராயும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரச்னை என்று மட்டும் பார்க்காமல், இணையத்தின் பிரச்னை என்றேதான் இதனை அணுகவேண்டும். அப்போதுதான் இனி உருவாகவிருக்கும் OTT நிறுவனங்களுக்கும், இப்போது இருக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank