பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்

ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின்
எண்ணிக்கையை குறைக்க 'கிடுக்கிப்பிடி!


75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே 'ஹால் டிக்கெட்'



பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 75 சதவீத வருகை இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்


பள்ளிகளுக்கு வராமல், பாஸ் செய்தால் போதும் என்ற மனநிலையுடன், அடிக்கடி,'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, கல்வித்துறை கிடுக்கிப்பிடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 'அட்டென்டென்ஸ் ஆப்'பை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது


கடந்த இரண்டு ஆண்டாக, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் தொடர்கிறது


சி.பி.எஸ்.இ.,யைவிட சற்று கூடுதலாகவும், என்.சி.ஆர்.டி., பாடத்திட்டத்தைவிட கூடுதலாகவும் படிக்கும் வகையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 ஆகிய வகுப்புக்கு, நடப்பாண்டு முதல் பாடப்புத்தகம் மாற்றப்பட்டது. வரும், 2019-20ல் மற்ற அனைத்து வகுப்புக்கும், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகிறது


புதிய பாடத்திட்டத்தில், 'க்யூ.ஆர்., கோட்' கூடுதல் தகவல்களுக்கான இணைய தள இணைப்புகள், யூ-டியூப் விளக்கம், இணைய தளத்தில் படம், பாடல்கள், பழைய சம்பவங்களுடன் காட்சிகள் என, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன


கூடுதலாக படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தான் படிப்பதை உறுதிப்படுத்தவும், இவை உதவுகிறது


இதன் மூலம், இம்மாணவர்கள், நீட், என்.ஐ.டி.,- ஐ.ஐ.டி.,- ஐ.ஐ.எம்., உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எளிதில் எழுதும் வாய்ப்பை பெறுகின்றனர்


அதே நேரம், மாணவர்கள் வருகை குறைவு, காப்பி அடித்தல், வேறு நபர்களை வைத்து எழுதுதல், விடைத்தாளை மாற்றுதல் அல்லது கூடுதல் தாளை இணைத்தல் போன்ற தவறுகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது



 பாஸ்' ஆனால் போதும் என நினைக்கும் மாணவர்கள், அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டு, 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, 2018 டிச.,1 முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, 'அட்டென்டென்ஸ் ஆப்' அறிமுகம் செய்து, 'கிடுக்கிப்படி' உத்தரவை கல்வித்துறை வெளியிட்டுள்ளது


இதுபற்றி, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது


பொது தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி, அனைத்து மாணவர்களுக்கும், 'இ.எம்.ஐ.எஸ்.,' என்ற பதிவுடன், எண் வழங்கப்பட்டுள்ளது


அப்பதிவில், அம்மாணவனின் சரியான பெயர், தந்தை பெயர், விலாசம், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்தும் பதிவாகிவிட்டது


இதை இணைத்து, இந்த, 'ஆப்' உருவாகி உள்ளது. டிச., 1 முதல் மாணவரின் வருகையை, இந்த, 'ஆப்'பில் பதிவு செய்ய வேண்டும். உடல் நலக்குறைவு உட்பட சில காரணங்களுக்காக மட்டும், அரை நாள் விடுப்பு, பர்மிஷன் போன்றவைகளை அனுமதிக்கலாம்


திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, அதுபோன்ற அனுமதி இல்லை. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 'அட்டென்டென்ஸ்'க்கும், தலா, இரண்டு மதிப்பெண் உள்ளது. பிளஸ் 2 மாணவருக்கு, மொத்தம், 12 மதிப்பெண் கிடைக்கும்


இதில், 85 சதவீதம் மற்றும் அதற்கு மேல் வருகைக்கு, முழு மதிப்பெண்ணாக, இரண்டும், அதற்கு கீழ், 75 வரை இருந்தால், ஒரு மதிப்பெண் வழங்கப்படும். அதேநேரம், 75 சதவீதம் வருகை பதிவு இல்லாவிட்டால், ஹால் டிக்கெட் பெற முடியாது


நடப்பாண்டு முதல், பள்ளி கல்வித்துறை இணைய தளத்தில் இருந்து, அந்தந்த பள்ளிகள், தங்களுக்கான, 'பாஸ்வேர்டு' மூலம், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்


அதில், 75 சதவீத வருகைக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் ஆகாது


உரிய காரணம் இருந்தால், அந்தந்த பகுதி முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை வழங்கி, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், டிச., 1 முதல் இதை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank