இமயமலையில் பூகம்பம்: ஆய்வு மையம் எச்சரிக்கை!
எந்த நேரத்திலும் இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்படும் என ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையம் நேற்று (நவ.30) எச்சரித்துள்ளது.
இமயமலையில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என இதுவரை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் பெங்களுரூவில் உள்ள ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தினைச்சேர்ந்த நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இந்த ஆய்வானது நிலவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.. அந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இமயமலை உள்ள பூமியின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் டெக்டானிக் தகடுகளில்(Tectonic Plates) பல இடங்களில் அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் விளைவாக எதிர்காலத்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பூகம்பம் 8.5 ரிக்டர் அளவு கொண்டதாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்க வாய்ப்புண்டு.
மேற்கு நேபாளத்திலுள்ள மோஹன கோலா மற்றும் இந்திய எல்லைப்பகுதியிலுள்ள சோர்காலியா ஆகிய இரண்டு பகுதிகளுக்கு அடியிலுள்ள டெக்டானிக் தகடுகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த தகடுகளின் முன்பகுதியானது இமயமலையின் மத்திய பகுதிக்கு அடியில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுக்காக இந்திய நிலவியல் சர்வே வெளியிட்ட அப்பகுதியின் நிலவியல் வரைபடத்தையும் கூகிள் வெளியிட்ட வரைபடத்தையும் இஸ்ரோவின் சாட்டிலைட்டின் பிம்பத்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 600-700 ஆண்டுகள் வரை பூமிக்கடியில் எந்த அதிர்வுகளும் ஏற்படவில்லை. அதனால் டெக்டானிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தமானது அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் எந்த நேரமும் அதிகரித்து வரும் அழுத்தம் பூகம்பமாக வெடிக்கலாம்.
எதிர்காலத்தில் எந்த நேரமும் நிகழ இருக்கும் இந்த பயங்கர பூகம்பத்தினால் பெரும் நாசம் ஏற்படும். மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தப்பகுதி நிகழப்போகும் பேரழிவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த ரோஜர் பிகாம் என்ற நிலவியல் அறிவியலாளரும் இதே போன்று ஆய்வு மேற்கொண்டு எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது