அறிவியல்-அறிவோம்: மஞ்சளின் மகிமை

(S.Harinarayanan GHSS, Thachampet)


மகத்துவம் நிறைந்த மஞ்சள் 


இந்தியர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த மஞ்சள்  இந்தியாவின் மிகப் பழமையான ஒரு நறுமணப் பொருள். இந்து மதச் சடங்குகளின்போது ஒரு புனிதப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. இது மங்களத் திரவியங்களில் முதலில் குறிப்பிடப்படும் பொருளாக உள்ளது. பொன்னிறமும், நறுமணமும், அருங்குணமும் அதற்கு இந்த முதல் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
நம்முடைய , பாரம்பரிய மருத்துவத்திலும், புனித நிகழ்ச்சிகளிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை பிறகு மஞ்சளுக்கான காப்புரிமையையும்(Patent right) அமெரிக்கா பெற்று வைத்துள்ளது.

எல்லோரிடமும் மஞ்சளின் பெருமையைக் கொண்டு சேர்க்கும் வகையில் மஞ்சள் தினம் எனவும் ஜூலை 14-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண்கள் பூப்படையும்போது அதை கொண்டாடும் சடங்கினை மஞ்சள் தண்ணீர் விழா அல்லது மஞ்சள் நீராட்டு விழா என்று அழைக்கிறோம். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதாலும் அதை கலந்து குளிக்கச் செய்வதாலும் இவ்விழா இப்பெயரால் அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் மஞ்சள் பூசி குளிக்காத தமிழ் பெண்ணைப் பார்க்க முடியாது. பெண்கள் நெற்றியில் தினசரி இடும் உண்மையான குங்குமமும் மஞ்சளில் இருந்து செய்யப்படுவதே.

மஞ்சளின் வகைகள்...

Curcuma longa என்ற அறிவியல் பெயர் கொண்ட மஞ்சள் Zingeberaceae குடும்பத்தை சேர்ந்தது.

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை வில்லை வில்லையாக, தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். இதை கறிமஞ்சள் என்றும் சொல்வதுண்டு.

மஞ்சளின் மகிமை

மஞ்சள் ஞாபகசக்தியை மேம்படுத்தும்` என்று `அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜீரியாட்ரிக் சைக்கியாட்ரி’ (American Journal of Geriatric Psychiatry) பத்திரிகையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. மஞ்சளிலுள்ள  `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது! இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம்.

மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின்(curcumin) (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.குர்குமின் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃப்ளமேஷன் போன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது இதயம், கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல் என உடலின் அனைத்துப் பகுதிகளின் அழற்சியையும்  சரிசெய்யும்.
குர்க்குமின் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோயால் மூளையில் ஏற்படும் கெடுதி தரும்படிவைக் (Plaque) குறைக்கிறது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மனித மூளையில் அல்சைமர் நோய் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா அமைலாய்ட் புரதங்களைப் பரிசோதனைக் குழாயில் போட்டு அத்துடன் மிகக் குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா அமைலாய்ட் புரதங்களை ஒன்று சேரவிடாமல், அவை நாறுகளாக மாறாமல் இருக்க உதவுகிறது.
பீட்டா அமைலாய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே, இந்த புதிய கண்டுபிடிப்புகள் அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக அமைந்துள்ளது. 

ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

இதயத்தில் ரத்தக்குழாய் சுருங்குவதற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் அதிக அளவில் புரதம் உற்பத்தியாவதுதான் காரணம். இப்போது புற்றுநோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும் மணமும் தருவதற்கு மட்டுமே பயன்படுவதல்ல மஞ்சள்; புற்றுநோயை உண்டாக்கக்கூடிய புரதத்தைத் தடுக்கக்கூடியதும் கூட என்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின்(Curcumin) என்கிற மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீட்டா அமைலாய்ட் புரத சேமிப்புகளை(Beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
லுக்கேமியா என்கிற ரத்தப் புற்றுநோய், விரைப் புற்றுநோய், சருமப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மற்றும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நல்ல மஞ்சளா... கண்டுபிடிப்பது எப்படி?

இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, அதை உலரவைத்துப் பயன்படுத்தலாம். மஞ்சள் கிழங்கை வாங்கும்போது, அதை உடைத்துப் பார்த்து வேண்டும். அதன் உள்பகுதி ஈரமாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தால், அது நல்ல மஞ்சள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022