நாடு முழுவதும் ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம் மத்திய அரசிதழில் விரைவில் வெளியிட திட்டம்

நாடு முழுவதும், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மத்திய அரசிதழில் இடம் பெறும்' என,மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



 நாடு முழுவதும் ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம்  அசத்தல்! மத்திய அரசிதழில் விரைவில் வெளியிட திட்டம்


தற்போது, வாகனங்கள் ஓட்டுவதற்கான, 'லைசென்ஸ்' எனப்படும், ஓட்டுனர் உரிமத்தின் வடிவம், அதில் இடம்பெறும் விஷயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர், வேறு மாநிலத்துக்கு சென்று தங்கும்போது, ஓட்டுனர் உரிமத்தை மாற்றுவதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, நாடு முழுவதும், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமங்களை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசிதழ்


இதுகுறித்து, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுவதும், வாகனங்கள் ஓட்ட வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்களை, ஒரே மாதிரி வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை அமல்படுத்துவதற்கான இறுதி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய அறிவிப்பு, மத்திய அரசிதழில் விரைவில் வெளியாக உள்ளது.

மாநிலங்கள் நலன்


அதன் பின் வழங்கப்படும் உரிமங்களின் வடிவம், அதில் இடம் பெறும் விஷயங்கள் உள்ளிட்டவை, ஒரே மாதிரி

இருக்கும்.ஓட்டுனர் உரிமங்கள் வழங்கும் பணி, மத்திய அரசைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக, தற்போது, ஓட்டுனர் உரிமங்கள், அந்தந்த மாநிலங்களின் நலனை மட்டும் முன்னிறுத்தும் வகையில், தயாரிக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும் வழங்கப்படும் ஓட்டுனர் உரிமங்கள், நிறத்திலும், வடிவத்திலும்வித்தியாசப்படுகின்றன. இந்த நிலையை மாற்றவே, ஒரே மாதிரி உரிமங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்ட பின், பழைய ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், புதியதை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.



'தயார் ஆகிறது தகவல் களஞ்சியம்'


பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, புதிய லைசென்ஸ் குறித்து, ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:நாடு முழுவதும், வாகன ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருப்போர் குறித்த தகவல் களஞ்சியத்தை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம், போலி ஓட்டுனர் உரிமங்களை தடுக்கலாம். ஒரே நபர், ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதையும், தடுக்க முடியும்.தற்போதுள்ள நடைமுறைப்படி, ஓட்டுனர் உரிமங்கள் வாங்குவது, மிக எளிதாக உள்ளது. இதனால், ஒரே நபர், ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்திருப்பது, சாதாரணமாகஉள்ளது.ஓட்டுனர் உரிமங்கள் வழங்கும் முறை, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதும், ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் பெறுவதை எளிதாக்குகிறது.இதைத் தடுக்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான

ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்படும். இந்த பணியை, மத்திய அரசு மேற்கொள்வதால், ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருப்போர் குறித்த தகவல் களஞ்சியம் உருவாக்குதல் எளிதாகும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

'ஸ்மார்ட் கார்டு' வழங்க திட்டம் 

நாடு முழுவதும் ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம் வழங்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, கடந்த அக்டோபரில், வரைவு அறிவிப்பை வெளியிட்டது. அது குறித்த கருத்துகளை, மக்கள் தெரிவிக்க, நவ., 30 வரை அவகாசம் தரப்பட்டது.அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:மத்திய அரசு வழங்கவுள்ள புதிய ஓட்டுனர் உரிமங்கள், மின்னணுவியல் முறையில் தயாரிக்கப்படும், 'ஸ்மார்ட் கார்டு'களாக அல்லது லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளாக இருக்கும். இந்த உரிமங்கள், 2019, ஜூலை முதல் செல்லத்தக்கதாக இருக்கும்.புதிய ஓட்டுனர் உரிமங்களில், துரித தகவல் அளிக்கவல்ல, 'கியூ.ஆர்., கோட்' இடம் பெற்றிருக்கும். இந்த உரிமங்களில், 'இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ்' என, எழுதப்பட்டிருக்கும்.கார்டு வைத்திருப்பவர் பெயர், முகவரி, ரத்த பிரிவு, உறுப்பு தானத்துக்கான ஒப்புதல், உரிமம் வழங்கப்பட்ட தேதி, எந்த ஆண்டு வரை செல்லும் என்ற தகவல், வாகனங்களின் தன்மை உள்ளிட்ட தகவல்கள், அதில் இடம்பெற்றிருக்கும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank