அறிவியல்-அறிவோம்: கோபம் நம்மை மெல்ல கொல்லும்-எச்சரிக்கை
அறிவியல்-அறிவோம்: கோபம் நம்மை மெல்ல கொல்லும்-எச்சரிக்கை
#அறிவியல்-அறிவோம்
(S.Harinarayanan)
கோபம் நம்மை மெல்ல கொல்லும்-எச்சரிக்கை
ஒருவருக்கு கோபம் வந்தால் என்னவெல்லாம் நிகழும்? கோபத்தை உண்டு பண்ணியவரை திட்டித் தீர்ப்பார்கள்... கையில் வைத்திருக்கும் பொருளைப் போட்டு உடைப்பார்கள்... சிலரோ, கோபத்துக்குக் காரணமானவரை தாக்கும் அளவுக்குச் செல்வார்கள். இல்லையெனில் தங்களைத் தாமே காயப்படுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலர் ரொம்பவே விதிவிலக்கு... என்னதான் கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வஞ்சமாக வைத்துக் கொள்வார்கள்.
கோபப்படும்போது நம் உடலில் பலவித ரசாயன மாற்றங்கள் நடக்கின்றன.
மூளையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமிக்டலாவின் கட்டளைப்படி, கேட்டகாலமைன் எனும் ரசாயனம் சுரக்கத் தொடங்குகிறது. இந்த ரசாயனம் மூச்சின் வேகத்தை அதிகரித்தும், இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தும், உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழக்கத்தை விட அதிகமாகவும் அதிவேகத்திலும் வழங்குகிறது. இதனால் சிறிது நேரத்துக்கு அதிவேக ஆற்றல் கிடைக்கும். அட்ரினலின், நான்-அட்ரினலின் ஹார்மோன்களும் கோபத்தின் போது சுரந்து, உங்களை சண்டையிடும் நிலைக்கு தயார்படுத்தும்.
ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கோபம் பலவித நோய்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது உங்களுக்கு தெரியுமா?
மன அழுத்தம்:
அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும்.
இதய நோய்:
கோபம் வரும்போது வரும் படபடப்பு தன்மை, இதய துடிப்பை அதிகப்படுத்தி இதயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆபத்தான விளைவுகளில் முடியும்.
தூக்கமின்மை:
கோபம் வரும் போது, ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் சரியான தூக்கமின்மை, ஓய்வில்லாமையால் நோய் எளிதாக தாக்கும்.
ரத்த அழுத்தம்:
கோபம் வரும் போது உடலில் ரத்த அழுத்தம் உடனடியாக, அதிகப்படியான அளவுக்கு அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயம் கடுமையாக பாதிக்கப்படும்.
சுவாசக்கோளாறு:
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆஸ்துமா உள்ளவர்கள் அதிகம் கோபப்பட கூடாது. இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
மாரடைப்பு:
பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத்தான் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையோ, கோபமூட்டும் விஷயத்தையோ கூற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளை வாதம்:
மூளை வாத நோய் ஏற்படுவதற்கு, மூளையில் உள்ள ரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான ரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதால், அவை ரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். ஆகவே அதிக கோபம் ஆபத்து.
கோபத்தை குறைக்கும் செம்பருத்தி :
செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆவான்.