அறிவியல்-அறிவோம்: "அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்தின்(Anesthesia) செயல்பாட்டை அறிவோம்"

காயம், அறுவைசிகிச்சை என்றால் வலிநிவாரணிகள், மயக்க மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மயக்க மருந்து இல்லை என்றால், நம் நிலை என்ன என்று யோசித்துப்பார்த்தாலே பயம் வரும். அந்தக் காலத்தில், நம் பாரம்பரிய மருத்துவங்களில் வலி நிவாரணியாக அபின், கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிக்கு 

மயக்கமடைந்த நிலையில் கடுமையான அல்லது தாங்க முடியாத வலி ஏற்படுத்தும் மருத்துவ அறுவை(Operation) சிகிச்சையை  மேற்கொண்டனர்.

அனைவராலும் மயக்க மருந்தை எளிதில் கொடுத்துவிட முடியாது. சிறிது அதிகமானாலும், உயிரிழப்புகூட ஏற்படும் என்பதால், இதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டும்தான் மயக்க மருந்தைக் கொடுக்க முடியும். இதற்கு, அனஸ்தீசியா என்ற பிரத்யேக மருத்துவப் பிரிவே உள்ளது.

மயக்கமருந்து கண்டுபிடிப்பின் வரலாறு.

நீண்ட நெடுங்காலம் முதலே, அறுவைசிகிச்சையின்போது வலியில்லாமல் இருக்க பலவகையான மருந்துகள் உபயோகிக்கப்பட்டன. 

பண்டைக்கால ரோமானியர்களும் எகிப்தியர்களும் மந்திரேக் எனும் மந்தரகோரா செடியின் வேரைப் பயன்படுத்தினர். ரொம்ப காலம் இதுவே ஐரோப்பிய மருத்துவர்களால் நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படுத்த உபயோகிக்கப்பட்டது.

அடுத்து, கோக்கோ காயின் மேற்பகுதியை கடித்துச் சாப்பிடச் சொன்னார்கள். வலி தெரியாமல் இருக்க கோக்கோ திரவத்தை காயங்களின் மீது தடவுவதும் நடந்தது.

ஆங்கிலேய விஞ்ஞானியான ஹம்பிரி டேவி, மயக்கமூட்டும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் கலவையான நைட்ரஸ் ஆக்சைடை கண்டுபிடித்தார். அதுதான் ‘சிரிப்பூட்டும் வாயு’ எனப்படுகிறது. இந்த வாயுவைக் கண்டுபிடிப்பதற்குள் ஹம்பிரி டேவி அதன் பாதிப்பால் பல தடவை மயக்கம் போட்டு விழுந்தார். அவரது வழிகாட்டலில்தான் வாயுக்கள் மயக்க மருந்தானது.

ராணி விக்டோரியா தனது ஏழாவது குழந்தை வலி இல்லாம பிறக்க உதவி செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர் சிம்சனிடம் கேட்டார். அவர்தான், 1838-ல் முதல்முறையாக குளோரோபார்மை பயன்படுத்தினார்.

ஜார்ஜியா நாட்டு மருத்துவரான கிராபோர்டு 1842-ம் ஆண்டு மயக்கமருந்தாக ஈதரை உபயோகப்படுத்தினர். ஆனால் அது சரியாக பலன் தரவில்லை. ஈதர் பிரயோகிக்கப்பட்ட நோயாளிகள் அறுவைசிகிச்சையின் பாதியில் மயக்கம் தெளிந்து எழுந்து கத்தியதெல்லாம் நடந்தது. இப்போது குளோரோபார்ம் மற்றும் பார்பியூரிக் அமிலம் ஆகியவை மயக்க மருந்தாக பயன்படுகிறது.

அனஸ்தீசியா (Anesthesia):

நோயாளிக்கு உடல் முழுவதையுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோஉணர்வற்றதாக, வலியற்றதாக மாற்ற, மருந்து அளிப்பதை அனஸ்தீசியா என்கிறோம். மொபைலில் சைலன்ட் மோடு இருப்பது போல, முழு உடல் அல்லது குறிப்பிட்ட பகுதியைத் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு மாற்றுவதுதான் அனஸ்தீசியா. இதன் மூலம், வலி என்ற விஷயமே நோயாளிக்குத் தெரியாது.

யாருக்கு, என்ன அளவு, என்ன மாதிரியான மயக்க மருந்து என்பதை முடிவுசெய்யும் திறன் பெற்றவரை ‘மயக்க மருந்தியல்நிபுணர்’         (Anesthesiologist) என்கிறோம். ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மற்றும் செய்யப்படும் அறுவைசிகிச்சை ஆகியவற்றைப் பொறுத்து, எந்த வகை மயக்க மருந்தைச் செலுத்துவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். எந்த வகையாக இருந்தாலும், அதைத் தேர்ந்த மருத்துவர் மட்டுமே அளிக்க வேண்டும். பொது மருத்துவர், செவிலியர் என்று யார் வேண்டுமானாலும் மயக்க மருந்தைக் கொடுக்க முடியாது.

மயக்க மருந்து நிபுணர்என்ன செய்வார்?

மயக்க மருந்து நிபுணருக்கு நோயாளியை மயங்க வைத்தவுடன் வேலை முடிவடைவதில்லை. அந்தந்த துறை சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவர்களின் பணியை மட்டும்தான் செய்வார்கள். அறுவை சிகிச்சையின்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கண்காணிப்பதும், வேறு பிரச்னைகள் ஏதாவது வரும்போது, அதை கட்டுக்குள் கொண்டு வருவதும் மயக்க மருந்து நிபுணர்கள்தான். 

லோக்கல் அனஸ்தீசியா(Local anesthesia):

உடலில் ஒரு சிறு இடத்தை மட்டும் மரத்துப்போகச் செய்வதற்காக லோக்கல் அனஸ்தீசியா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பற்களில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு லோக்கல் அனஸ்தீசியா அளிக்கப்படும். குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிலும் தேவைப்படும் அளவுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தப்படும். இதனால், அந்தப் பகுதி மட்டும் மரத்துப்போகும். ஆனால், அறுவைசிகிச்சை செய்யப்படும்போது, நோயாளி சுயநினைவுடன் இருப்பார்.

ரீஜனல் அனஸ்தீசியா(Regional anesthesia):

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு என்றால், அந்தப் பகுதி முழுவதுமே உணர்வு நீக்கம் செய்ய மருந்து அளிப்பதை ‘ரீஜினல் அனஸ்தீசியா’ என்பார்கள். உதாரணமாக, கை மூட்டு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனில், ஒரு பக்க கை, கால் மரத்துப்போக மயக்க மருந்து தரப்படும். ஊசி மூலமாகவே இந்த வகை மயக்க மருந்துகள் செலுத்தப்படும். ரீஜினல் அனஸ்தீசியாவில் இரண்டு வகை இருக்கின்றன.

அடிவயிறு, இடுப்பு, மலக்குடல், கால் மூட்டு போன்ற இடுப்புக்குக் கீழே இருக்கும் இடங்களில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாக இருந்தால், முதுகுத்தண்டுக்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஒரே ஒரு ஊசி மட்டும் போடுவார்கள். இதனால், இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகள் மட்டும் முற்றிலும் மரத்துப்போகும். இதை, ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’(Spinal anesthesia) என்பார்கள்.

சிசேரியன் முதலான அறுவைசிகிச்சைகளுக்கு ‘எபிடியூரல் அனஸ்தீசியா’(Epidural anesthesia) என்ற முறை கையாளப்படுகிறது. சில அறுவை சிகிச்சைகளில், வலி மிக அதிகமாக இருக்கும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதுகுத்தண்டுக்குக் கீழே ஊசி மூலம் கதீடர் எனும் குழாய் இணைக்கப்பட்டு, அதன் வழியே தொடர்ச்சியாக மயக்க மருந்துகள் செலுத்தப்படும். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு இந்த முறையில் மயக்க மருந்துகள் செலுத்தப்படும்.

ஜெனரல் அனஸ்தீசியா(General anesthesia):

 ஒரு சில அறுவைசிகிச்சையின்போது நோயாளியைத் தற்காலிகமாக சுயநினைவை இழக்கச்செய்ய ஜெனெரல் அனஸ்தீசியா முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் நோயாளி முற்றிலும் சுயநினைவு இன்றி இருப்பார். செயற்கை ஆக்சிஜன் கொடுக்கப்படும். மயக்க மருந்துகள் டிரிப்ஸ் வழியாகச் செலுத்தப்படும். இதில் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளால், தசைகள் செயற்கையாகச் செயல் இழக்க வைக்கப்பட்டு அறுவைசிகிச்சைக்குத் தயாராக்கப்படும். இந்தத் தசைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர தனி மருந்துகள் தந்து, படிப்படியாக நோயாளியை மீட்டு, இயல்புநிலைக்குக் கொண்டுவருவார்கள். அதுவரை, மயக்கவியல் நிபுணர், செவிலியர்கள் உடன் இருந்து கண்காணிப்பர்.

யாருக்கு, என்ன அளவு தர வேண்டும்?

நோயாளியின் எடையைப் பொறுத்தே மயக்க மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட அளவில் கொடுக்கப்படுகின்றன. ரிஸ்க் என்பது எல்லாவற்றிலும் உள்ளதுபோல, இதிலும் இருக்கிறது. மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கம் இல்லாத, இயல்பான ஆரோக்கியமான நபருக்குப் பாதிப்பு மிகமிகக் குறைவாக இருக்கும். பல் அறுவைசிகிச்சைகளில் லிக்னோகைன் எனும் லோக்கல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். இது, 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை வாயை மரத்துப்போகச்செய்யும். இது போல, ஒவ்வொரு மயக்க மருந்துக்கும் கால அளவு இருக்கிறது. இதனை, மருத்துவர்கள் அனுமதி இன்றி எந்தக் காரணம் கொண்டும் யாரும் பயன்படுத்தக் கூடாது. ஒரு நோயாளி, அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் முன்பு, பிரீமெடிகேஷன் கொடுப்பது, தொடர்ந்து அறுவைசிகிச்சையின் போது உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது, அதற்கு ஏற்ப உடனடியாக மருந்துகள் தர வேண்டியது, அறுவைசிகிச்சை முடிந்து மீண்டும் நலம் பெற்றுத் திரும்பும் வரை கண்காணிக்க வேண்டியது மயக்க மருந்தியல் மருத்துவரின் கடமை.

ஏன் மயக்க மருந்தியல் மருத்துவர் (Anesthesiologist) தேவை?

எல்லா பிரச்னைகளையும் கண்டறிய பரிசோதனைகள் பயன்படாது. சிகிச்சை வரலாறு தெரிந்தாலேபோதும். ஒரு நோயாளியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளை சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மட்டும் அல்லாமல் மயக்க மருந்தியல் மருத்துவரிடம் தவறாமல் சொல்ல வேண்டும். சிலருக்கு, சாதாரண குரோசின் முதலான வலி நிவாரணி மாத்திரைகளேகூட அலர்ஜியாக இருக்கும். எனவே, எந்தப் பொருள் அலர்ஜி என்பதை மறைக்கக் கூடாது. பெற்றோர்களுக்கு என்னென்ன நோய்கள் இருந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்திருந்தால், அதுபற்றி தெரிவித்து, ரிப்போர்ட் இருந்தால் எடுத்து வர வேண்டும். ஏனெனில், எந்த மயக்க மருந்து எப்படி வேலை செய்தது என்பதை அப்போதுதான் கண்டுபிடிக்க முடியும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால், கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லை எனில் நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் சிகிச்சையளிக்கும்போது பாதிப்புகள் ஏற்படலாம். ஆஸ்துமா, வலிப்பு நோய், மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், சர்க்கரை நோய், நெஞ்சு வலி போன்றவை ஏற்கெனவே வந்திருந்தால், மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)