அறிவியல்-அறிவோம் - "ஹேர் டை ஆபத்து" அறிவோம்.
நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.
இளநரை:
இளநரை ஒருசில குடும்பத்தில் தொடர்ச்சியாக பாதிக்கும். அதாவது பாட்டி, அம்மா, பேத்தி எல்லாருக்குமே சின்ன வயதிலேயே நரை வந்ததாகச் சொல்வார்கள்.
இது அவர்களுடைய மரபணுக்களில் உள்ள ஒரு சின்ன குறைபாடு. அவர்களுடைய மெலனோசைட்கள் 30 முதல் 40 வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் 20 வயதிலேயே சோர்ந்து வேலை செய்வதை நிறுத்தி விடுவதால் இளநரை உண்டாகிறது.
சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.ஒரு சிலருக்கு ரத்த சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு, செம்புச்சத்து குறைபாடு(Copper), புரதச்சத்து குறைபாடுகளும் முடியை வெள்ளையாக்கலாம். இவ்வாறு சத்து குறைபாட்டினால் வரும் வெள்ளை முடியானது, அந்த சத்துகளை நாம் கொடுக்கும்போது கருப்பாக மாறும். சில வகை மாத்திரைகளை உட்கொள்வதும் முடியை வெள்ளையாக்கலாம். (எ.கா: Chloroquine, Phenylthiourea, Triparanol போன்ற மருந்து வகைகள்.) புகைப்பிடிப்பதாலும் சிலருக்கு இளநரை ஏற்பட காரணமாக இருக்கலாம்.
இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான்.
இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் PPD சேர்த்திருப்பார்கள்.Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே. முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்''
டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்''
இயற்கை டை!
அவுரி இலை - 50 கிராம், மருதாணி இலை - 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம், கறிவேப்பிலை - 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்