அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 152 அங்கன்வாடி பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 181 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம், நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.
அங்கன்வாடி பணியாளர் பணிக்கு...: 1.1.2019 அன்று 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கணவரை இழந்தவர்கள், கணவனரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் எனில், 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வசிப்பவர்கள் எனில் எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மற்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அந்த கிராமத்தில் இல்லை எனில், அந்தப் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமங்கள் அல்லது 3 கி.மீ. தொலைவுக்குள் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நகர் பகுதி எனில், அதே வார்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதெனும் ஒன்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். சான்றொப்பம் இடப்பட்ட கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அல்லது மாவட்ட திட்ட அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது