#அறிவியல்-அறிவோம்காபியில் சேர்க்கும் "சிக்கரி தூள்" நல்லதா?
சிக்கரியை ‘சிகோரியம் இன்டிபஸ்’
(Cichorium intybus)என்று தாவரப் பெயரில் அழைக்கிறார்கள்.இது சூரியகாந்தி தாவர குடும்பத்தை(Asteraceae)சார்ந்தது. ஒரு காலத்தில் பிரான்ஸ் நாட்டில் காட்டுச்செடிபோல் எங்கு பார்த்தாலும்
, வளர்ந்து கிடந்தது. அங்கிருந்து இங்கிலாந்துக்குப் சென்று, அதன்பிறகு உலகம் முழுவதும் பரவியது.சிக்கரி தாவர கிழங்கு பார்ப்பதற்கு முள்ளங்கியைப் போலவே இருக்கும். சிக்கரியின் கிழங்கை காயவைத்துதான் சிக்கரி தூள் தயாரிக்கிறார்கள். இது எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது.
காபியை, 'முதலாளிகளுக்கான பானம்' என்றும் டீயை, 'தொழிலாளர்களுக்கான பானம்' என்றும் சொல்லும் பழக்கம் வெள்ளையர்கள் காலத்தில் இருந்தது. காபி குடிப்பது அப்போதெல்லாம்... ஏன், இப்போதும் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில், காபியுடன் சிக்கரியைக் கலப்பது, 1832ல் தடை செய்யப்பட்டது. பின், 1840ல், சிக்கரியை கலப்பது குறித்து, காபி வாங்குவோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தத் தடையை விலக்கிக் கொண்டனர். நம் நாட்டில் கூட, சிக்கரி எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளது என்பதை காபி தூள் வாங்கும் கவரில் கட்டாயம் போடவேண்டும் என்ற விதிமுறை இன்றளவும் உண்டு.
இந்தியாவில் சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
சிக்கரியின் மருத்துவ குணங்கள்:
சிக்கரியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை. இதனால் கால்நடை உணவுகளில், சிக்கரியைப் பயன்படுத்துகின்றனர். கால்நடைகளின் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதில் சிறப்பாக பணிபுரிகின்றது.சிக்கரி உடல் சூட்டைத் தணிக்கிறது. மூச்சுத் திணறல், அஜீரணக்கோளாறு, தலைவலி ஆகியவற்றை சரி செய்கிறது. மூளைக்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இதன் கசாயம் மாதவிடாய் போக்கை சீர் செய்கிறது. ஈரல் நோய்களை குணமாக்கி, சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.
ஃபிரான்ஸில் இதன் இலைகளை சலாட் செய்து பச்சையாகவே சாப்பிடுகின்றனர். இதன் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் டானிக், சிறுநீர் சுலபமாகப் போக மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் விதைகள், வேர்கள் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இதன் இலைகள் மற்றும் வேரில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் (சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியுலேட்டின்) போன்றவை உள்ளன.
சிக்கரியில் ‘காஃபின்’ இல்லாததால், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் உள் உறுப்புகளுக்கு அநேக நன்மைகளைச் செய்கிறது. ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காபியைவிட மிகக் குறைவு.
தீமைகள்:
நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, கர்ப்பிணிகளும், குழந்தைகளும் சிக்கரியை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. நாடித் துடிப்பைக் குறைத்துவிடும் தன்மை இதற்கு உண்டு.காபியில் 20 சதவீததிற்கும் குறைவாகவே சிக்கரி சேர்க்க வேண்டும் அதற்குமேல் என்றால் மயக்கம் தரும் பானமாகிவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய தன்மையும் உண்டு. இதனால் மருந்து உட்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.