தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசியம் - வழிகாட்டும் ஆசிரியர்!

தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது புதிதாக எதைப் படித்தாலும் நினைவில் தங்காது. எல்லா தேர்வுக்கு முன்னதாகவும் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.



 அந்த நாள்களில் ரிவிஷன் செய்வதுக்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆகவே, இப்போதே மாணவர்கள் படிக்கத் தொடங்குவது நல்லது."
திட்டமிடல்... நேர நிர்வாகம்... ஓய்வு...


 எல்லாம் அலுவலகம், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு மட்டுமல்ல, பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் மிகவும் அவசியம்.


 இன்னும் சில நாள்களில் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும், பிற வகுப்புகளுக்கான தேர்வுகளும் தொடங்க இருக்கின்றன. மாணவர்கள் பொறுப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டிய நேரமிது!


தேர்வுக்கு  மாணவர்கள் எப்படி தயாராக வேண்டும்... நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது எப்படி... முழு மதிப்பெண்களையும் பெற செய்ய வேண்டியது என்ன... பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

வழிகாட்டுகிறார் சென்னை, முகப்பேர் கிழக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர் ஆர். ஸ்ரீதர்.

``2019-ம் ஆண்டில் பொதுத்தேர்வு எழுதப்போகும் ப்ளஸ் ஒன்,ப்ளஸ் டூ மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் (வினாத்தாள் அமைப்பு) இல்லை.


 ஆகவே, மாணவர்கள் அதிகமான மதிப்பெண்களைப் பெறவேண்டுமானால் இன்னும் கூடுதலாக படிப்பில் கவனம் செலுத்தி, படிக்க வேண்டியிருக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்குப் படித்துவிட்டு செல்வதுபோல, பொதுத்தேர்வுக்குச் செல்லக்கூடாது.முன்பு, ஆசிரியர்கள் பொதுத்தேர்வில் எந்தெந்த கேள்விகள் எல்லாம் கேட்கலாம் என முக்கியமானவற்றைக் குறிப்பாக கொடுப்பார்கள். ஆசிரியர்கள் கொடுத்த குறிப்புகளின்படியே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.


 அதனால், மாணவர்கள் 95 மதிப்பெண்ணிலிருந்து 100 மதிப்பெண்களை முழுமையாக எடுக்க முடிந்தது.


ஆனால், இப்போது அதேபோல படித்துவிட்டு சென்றால் 80 மதிப்பெண்களைக்கூட எடுக்க முடியாது.

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டுதான் மாறவுள்ளது.


 இந்த இரு வகுப்புகளான தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பாலும் பழைய வினாத்தாள்களிலிருந்தே இருக்கும். இதுவரை, 35 வினாத்தாள்களை மாணவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.


அதில் முக்கியமான கேள்விகள் எல்லாம் வந்துவிட்டதால், அந்த வினாத்தாள்களில் இருந்தே 80 சதவிகித கேள்விகள் கேட்கப்படலாம். மீதி 20 சதவிகித கேள்விகள் கிரியேட்டிவாக இருக்கும். அவை பாடத்திட்டத்திலிருந்தே கேட்கப்படும் (பாடத்திட்டத்துக்கு உள்ளேயும் பாடப் புத்தகத்துக்கு வெளியேயும்).


அந்தக் கேள்விகள் எளிமையாகத்தான் கேட்கப்படும். கேள்விகளை ஒன்றுக்கு இருமுறை படித்துவிட்டுப் பதிலளிக்கவேண்டும்.


அதேபோல, தேர்வில் கடினமான கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்கள் நினைத்தால், அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது ஒரு மதிப்பெண் வினாக்களே.


 ஒரு மதிப்பெண் கேள்விகள் 15 என்றால், அதில் 8 வினாக்கள் பழைய வினாத்தாள்களிலிருந்தும் 7 மதிப்பெண்கள் பாடப் புத்தகத்திலிருந்தும் கேட்கப்படலாம்.


நீட் தேர்வை முன்னிறுத்தியே எல்லாக் கேள்விகளும் கேட்கப்படும் என்பதால் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். எனவே, மாணவர்கள் குறுகிய நோக்கில் படிக்காமல்  பல்முனை நோக்கில் (Divergent thinking) படிப்பது நல்லது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொருந்தும்.


ஆகவே, பழைய வினாத்தாள்களை மாணவர்கள் படித்துவிட்டு, தேர்வுக்குச் செல்வது வெற்றிக்கு வழிவகுக்கும்!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேர நிர்வாகம் என்பது மிகவும் முக்கியம்.


 ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வரும் மார்ச் 1-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன.


 ப்ளஸ் டூ தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது.


இவர்கள் தேர்வுக்கு முன்னதாக ஒன்றரை நாள்கள் மட்டும் மொழிப் பாடத்தை (தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச்) படித்தால் போதும்.


 ஆங்கிலப் பாடத்துக்குத் தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் இப்போதே படிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத் தேர்வுக்கு முன்னதாக (05.03.2019) மூன்று நாள் விடுமுறை வருகிறது. அந்த விடுமுறை நாள்களில் ஆங்கிலம் வழிக் கல்வி மாணவர்கள் படித்தால் போதுமானது.

இந்த ஒரு வாரத்தில் ஒன்றரை நாள் மொழிப் பாடத்துக்கும் மீதியுள்ள நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒதுக்கி, மாணவர்கள் படிப்பது அவசியம். ஒரு நாள் முழுவதும் ஒரு பாடத்தையே படிப்பது சோர்வு தரக்கூடியதாக இருந்தால், ஒரு நாளில் காலை ஒரு பாடத்தையும் மாலை ஒரு பாடத்தையும் படிக்கலாம்.


பாடங்களை சுமார் 3 மணி நேரம் படிக்கவேண்டும். பிறகு, அரைமணி நேரம் இடைவெளிவிட்டு ஓய்வெடுக்கவேண்டும். இந்த ஓய்வின்போது பழச்சாறுகள் அருந்தலாம்.


பிறகு, படித்ததை ரீகால் பண்ணவேண்டும். பெரும்பாலான மாணவர்கள் இந்த விஷயத்தில்தான் கோட்டைவிடுகிறார்கள். மாணவர்கள் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு தான் படித்ததையெல்லாம் எழுதிப்பார்க்கலாம்.


 படித்ததில் சில ஞாபகத்துக்கு வரும். பல ஞாபகத்துக்கு வராது. நினைவில் வராதது சரியாகப் படிக்கவில்லையென்று அர்த்தம். அவற்றை மீண்டும் படிப்பது அவசியம்!


தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது புதிதாக எதைப் படித்தாலும் நினைவில் தங்காது. எல்லா தேர்வுக்கு முன்னதாகவும் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.


 அந்த நாள்களில் ரிவிஷன் செய்வதுக்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆகவே, இப்போதே மாணவர்கள் படிக்கத் தொடங்குவது நல்லது.


தேர்வுக்கு முந்தைய நாள் 100 சதவிகிதம் ரிவிஷன் மட்டுமே செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தூக்கம் அவசியம்.

🔰பெற்றோர்களுக்கு ஓர் அறிவுரை!

மாணவர்களுக்கு எந்த நேரத்தில் படித்தால் நினைவில் பாடங்கள் பதியுமோ, அந்த நேரத்தில் படிப்பதே சிறந்தது. மாணவர்கள் செல்போன்களை அறவே தவிர்க்கவேண்டும்.


 நண்பர்களிடம் சந்தேகம் கேட்கிறேன் என்று செல்போனில் அழைத்துப் பேசும்போது, அவர்களுடைய பேச்சு வேறு திசையில் போய் கவனம் சிதறும் என்பதால் அதைத் தவிர்க்கலாம். அதேபோல, நண்பர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தாலும் தவிர்த்துவிடவும்!


தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயம் கண்டிப்பாக இருக்கும். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கும் சிலர் தேர்வின்போது சிறப்பாக எழுதாமலேயே வந்திருக்கிறார்கள்.


 அதற்குக் காரணம் பயம்தான். பெரும்பாலானோர் ஒரு மதிப்பெண் வினாக்களைப் பார்த்துத்தான் பயப்படுவார்கள். மற்ற கேள்விகளுக்கு சிறப்பாகப் பதிலளித்துவிட்டு, சிலர் ஒரு மதிப்பெண் வினாக்களை எழுதாமலேயேகூட வந்துவிடுவது உண்டு.


 அதைத் தவிர்க்க, தேர்வுக்கு முன்னதாக இரண்டு அல்லது மூன்று பாடங்களை எழுதிப்பார்த்துவிட்டுச் சென்றால், பயம் போய்விடும். இதற்குப் பெற்றோர்கள் உதவவேண்டும்


மாணவர்களை `நூற்றுக்கு நூறு வாங்கு...' என்று பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்க வேண்டாம். இதனால்தான் மாணவர்கள் சரியாக தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகிறார்கள்.


 `முடிந்தவரைச் சிறப்பாக எல்லாக் கேள்விகளும் பதிலளி... உன்னைப்போலத்தான் பிற மாணவர்களும் எழுதுவார்கள்.


 சிறப்பாகத் தேர்வுக்கு உன்னைத் தயார் செய்திருக்கிறாய்... அதனால் வெற்றி உனக்கே!’ என்று சொல்லி, நம்பிக்கையூட்டுவது அவசியம். பெற்றோர்கள் இப்படிச் சொன்னால் மாணவர்களுக்குத் தேர்வு அறை என்பது போர்க்களமாக இல்லாமல் பூக்கோலமாக மாறிவிடும்” என்கிறார் ஆர்.ஸ்ரீதர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)