அறிவியல்-அறிவோம்: "மகரந்த சேர்க்கை" குறைவும் மனித குல அழிவும்-எச்சரிக்கை.
(S.Harinarayanan)
மனித இனமானது தரமான உணவுப்பொருட்களை உண்பதற்கு மகரந்தச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களே காரணமாகின்றன. அந்த வகையிலான உயிரினங்களைப் பாதுகாக்காமல் அழிக்க முற்பட்டால் மனித இனமும் அழிந்து போகும் அபாயம் ஏற்படும்.
மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்கள் பணம் பெறாமல் நமக்குத் தெரியாமல் பல்வேறு உதவிகளைப் புரிவதால் நாம் தரமான உணவுப்பொருள்களைச் சாப்பிட முடிகிறது. பூக்கும் தாவரங்களில் இந்த மகரந்தச் சேர்க்கையாளர்கள் மேற்கொள்ளும் உதவிகளினால் நாம் நல்ல கனிவகைகளையும் மரக்கறி வகைகளையும் தானிய வகைகளையும் பெறுகின்றோம்.
ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கும் ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கும் இடம்பெறும் மகரந்தச் சேர்க்கையானது, தினமும் மகரந்தச்சேர்க்கையாளர்களால் நமக்குத்தெரியாமலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தன் மகரந்தச் சேர்க்கை, அயன் மகரந்தச் சேர்க்கை என்னும் செயற்பாடுகளை மகரந்தச் சேர்க்கையாளர்கள் மேற்கொள்வதால் நாம் தினமும் தரமான உணவுப்பொருட்களை உண்பதுடன் மீண்டும் அவற்றைப் பயன்படுத்தக் கூடிய தரமான உணவுப்பொருட்களை பயன்படுத்தக் கூடிய தரமான விதைகளையும் பெற முடிகின்றது.
"பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. மொபைல்போன் டவர், பூச்சி கொல்லிகளால் பறவையினம் அழிந்து வருவதால், மகரந்த சேர்க்கை குறைந்து தாவரங்கள் அழிந்து வருகிறது. உலகம் முழுவதும் பூச்சியினங்கள் உள்ளன. இதில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை நன்மை தருபவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இதன் பங்கு முக்கியம். பல மிருகங்களின் உணவாகவும் பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கவும் இவை உதவுகின்றன. 1,500 பட்டாம்பூச்சிகள் இந்திய உபகண்டத்தில் உள்ள வட கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிப்பவை. இந்த அழகிய உயிரினம் தற்போது மெள்ள அழிந்து வருகிறது. சூழல் மாசு காரணமாக பல மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன. பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளை உண்ணும் பட்டாம் பூச்சிகள் அழிந்து வருகின்றன. மனிதர்களே இதன் அழிவுக்கு காரணம். பூச்சியினங்கள் அழிந்து விடாமல் தடுக்க விரைவில் தீர்வு காணவேண்டும்.
பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. இங்கிலாந்தில் 50 ஆண்டுகளில் 99 சதவீத பட்டுப்பூச்சிகளும், அமெரிக்காவில் 50 - 60 சதவீத பட்டுப்பூச்சிகளும் அழிந்து விட்டன. காடுகள் அழிப்பு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அடங்கிய பூச்சி மருந்து பயன்பாடு ஆகியவை பூச்சி, பறவை அழிவுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும், தனிமனித இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வும் தற்போது அவசியமாகும். பட்டாம்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிவதால் மகரந்த சேர்க்கை குறைந்து, தாவர இனங்களும் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அடுத்த 30 ஆண்டுகளில் பெருகப் போகும் மக்கள் தொகையின் உணவுத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தீர்வை கண்டறிய வேண்டும்.
நகர்மயமாதல்:
நகரமயமாதல் அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குவது ஆகிய மாற்றம் தான், பறவைகளின் அழிவுக்கு முக்கிய காரணம். சீனாவில் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. மீண்டும் அதேபோன்ற காடுகளை கொண்டு வர முயற்சிப்பதை விட, இருக்கும் காடுகளையும் அவற்றை நம்பி வாழும் உயிரினங்களையும் பாதுகாப்பது நல்லது.
வயல்களில் அதிகளவில் பூச்சி மருந்து அடிப்பதால், மகரந்தச் சேர்க்கையை பரப்பி வரும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், குளவிகள், 7 வகையான வண்டுகள், எரும்புகள் இறந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 20 வருடமாகச் சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வடக்கில் பஞ்சாபில் இருந்து தெற்கில் கேரளா வரையிலும், மேற்கில் மகாராஷ்டிராவில் இருந்து மேற்கில் திரிபுரா வரையிலும் அனைத்து மாநில விவசாயிகளும் அவர்களது பகுதிகளில் தேனீக்களின் வரத்து முன்பிருந்ததைவிட குறைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேனீ என்றில்லை, தேனீ இனத்தைச் சேர்ந்த எந்த வகையும் பெருமளவில் வருவதில்லை என்று அஞ்சுகிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றில் சுய மகரந்தச் சேர்க்கையே நடைபெற்றாலும் அவற்றை மட்டுமே உண்ணமுடியாது. காய் மற்றும் கனி வகைகளின் உற்பத்தி இவற்றின் வருகை பாதிப்பால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வருந்துகிறார்கள்.
இந்தியாவில், 7.5 மில்லியன் டன் உணவு உற்பத்தி உள்ளது. அதில், மகரந்தச் சேர்க்கை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் 2 சதவீதம் குறைந்து வருவதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிக பூச்சிக்கொல்லி உபயோகிப்பதால் காய்கறிகள், பழங்கள் உற்பத்தி பாதிக்கிறது.
குறிப்பாக மகரந்தச் சேர்க்கையால் தக்காளி, வெண்டை, பூசணி, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் போன்றவை உற்பத்தி அதிகரிக்க காரணமாக உள்ளது. மகரந்தச் சேர்க்கையை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாரம்பரிய தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து சங்கிலித் தொடரில் பின்னிப்பிணைந்து வாழும் வகையில் அமைத்திருக்கிறது இயற்கை. அதன் படைப்பில் அனைத்தும் செழித்து வாழ்வதற்கு அது வகுத்தளித்த பாதையில் இருந்து பிறழ்ந்து சென்றது மனித இனம். அந்த ஒரு இனத்தின் பிறழ்வு உலகின் இயக்கத்தையே ஆபத்திற்கு உள்ளாக்கிவிட்டது.