வருமான வரி விலக்கு: புதிய சலுகை
வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை உயர்வு. நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்று அறிவித்தார்
பியூஷ் கோயல். மேலும் காப்பீடு, வீட்டு கடன் வட்டி போன்றவற்றை கட்டுவோர், 6.50 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டாம் என்றார்.
5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் மோடி ஆதரவாளர்கள் அதீத வரவேற்பு அளித்தனர். இதனால் நடுத்தர வர்க்க மக்கள் பலனடைவர் என கூறப்படுகிறது.
வருமான கழிவு கடந்த பட்ஜெட்டில் 40,000 ரூபாயாக இருந்தது. இது தற்போது 50,000 ரூபாய் ஆகியுள்ளது. இதனால் மூன்று கோடி பேர் பலனைடைகிறார்கள். வருமானம் 6.5 லட்சம் இருந்தால் அவர்கள் முதலீடு செய்யும்போது வருமான வரி கிடையாது.
5இலட்ச ரூபாய்க்கு மேலும் சிறுசேமிப்பு, பொதுப் பங்களிப்பு நிதி, காப்பீடு ஆகிய வகைகளில் செய்யும் முதலீட்டுக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் வரை 80சி விதியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.
வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு ஆண்டுக்கு 2இலட்சம் வரை கூடுதல் கழிவு அளிக்கப்படுகிறது. கல்விக்கடன் மீதான வட்டி, தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கான பங்களிப்புத் தொகை, மருத்துவக் காப்பீடு, மூத்த குடிமக்களுக்கான மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கும் கூடுதல் கழிவு வழங்கப்படும்.
மாத ஊதியம் பெறுவோருக்கு நிலையான கழிவு 40ஆயிரம் ரூபாயில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி, அஞ்சலக வைப்புத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு மூலத்தில் இருந்து வரிப்பிடித்தம் செய்வதற்கான வரம்பு பத்தாயிரம் ரூபாயில் இருந்து நாற்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகை வருமானத்தில் மூலத்தில் இருந்து வரி பிடிப்பதற்கான வரம்பு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாயில் இருந்து 2 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2009-2014 காலகட்டத்தில் பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பியுஷ் கோயல், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பணவீக்கம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது என்றார். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிரா விட்டால், மக்கள் தற்போது செலவழிப்பதைவிட 35 முதல் 40 % வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும் எனவும் அவர் கூறினார்.
நிதிப்பற்றாக்குறை அளவு 3புள்ளி4 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய நிதியமைச்சர், பாஜக அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் பல பத்தாண்டுகளுக்கு உயர்வளர்ச்சி நீடிக்கும் என குறிப்பிட்டார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இந்த ஆண்டு மேலும் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை முறைப்படுத்தியதன் காரணமாக, இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 2 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது எனவும் இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதை தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் குறிப்பிட்டார். முத்ரா திட்டத்தின் கீழ் 16 கோடியே 53 லட்சம் என்ற எண்ணிக்கையில், 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கருப்பு பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 3 லட்சத்து 38 ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு பதிவுநீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த 8 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். நேரடி வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியே 79 லட்சத்தில் இருந்து 6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்து ரீஃபண்ட் கேட்டவர்களில் 99புள்ளி54 விழுக்காட்டினரின் கோரிக்கை ஏற்கப்பட்டது எனக் கூறிய பியுஷ்கோயல், வருமான வரி கணக்கு தாக்கலை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால் ரீஃபண்ட் செய்யும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரி விலக்குடன் கூடிய பணிக்கொடையின் வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்படுவது பணிக்கொடை ஆகும்.