How to get Centum in 10th Maths? - UMA Teacher


How to get Centum in 10th Maths? - UMA Teacher


இந்த வாரம் குங்குமச் சிமிழ் - கல்வி வேலை வழிகாட்டியில்..
. (தங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் )


கணக்குத் தேர்வு அணுகுமுறை


தேர்வு என்றாலே பள்ளிக் குழந்தைகளுக்கு எப்போதும் பயம் தான் , அதோடு கணக்குப் பாடத்தில் தேர்வு என்றால் கூடுதல் பயம் அவர்களைத் தொற்றிக் கொள்கிறது என்றால் அது மிகையாகாது. ஆம் மொழிப் பாடங்களை அவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்கும் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை எளிதாகக் கடந்து விடுவதற்கும் அறிந்துள்ள போதும் கணக்குப் பாடத்தைப் பெரும் சுமையாகவும் பயத்துடனும் வெறுப்புடனும் அணுகுவதையே பெரும்பான்மையான மாணவர்களிடம் நாம் காணலாம். 


இதைக் களைவதற்கு நேர்மறை நம்பிக்கைக் கொள்ள வைப்பதற்கு ஆசிரியர்கள் பல நேரங்களில் போராட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளை விட அவர்களது வாழ்வில் திருப்பு முனையாக எண்ணும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போது இதற்கான சூழல் மிகப் பெரும் சவாலாக அமையும். 


ஆகவே மாணவர்கள் கணக்குத் தேர்வை எவ்வாறு அணுகலாம் என சில பகிர்தல்களை இங்கு காணலாம். 


இதுவரை கணக்குப் பாடத்தை சரியாகப் படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை , இன்றிலிருந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தால் சுலபமாக 75 மதிப்பெண்கள் வரை பெற்று விடும் வழிமுறைகள் கணக்குப் பாடத்தில் உண்டு. 


புத்தகத்தில் மொத்தம் 12 தலைப்புகள் உள்ளன. அதில் செய்முறை வடிவியல் மற்றும் வரைபடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பயிற்சி செய்தால் 20 மதிப்பெண்கள் முழுமையாகப் பெற்று விடலாம். இதில் வரைபடக் கணக்கில் படம் , அளவுத் திட்டம் , அளவுகள் சரியாகக் குறிக்கப்படுதல் மற்றும் அட்டவணை மதிப்புகள் இவற்றை சரியாகச் செய்தால் 10 மதிப்பெண்கள் பெற முடியும். 


செய்முறை வடிவியல் பகுதியில் உதவிப் படம் சரியாக வரைந்தால் 2 மதிப்பெண்களும் உண்மைப் படம் சரியாக வரைந்து அளவீடுகள் சரியாகக் குறித்து பெயரிட்டு முழுமையாக்கினால் மீதமுள்ள 8 மதிப்பெண்கள் ஆக முழுமையான 10 மதிப்பெண் பெற்று விடலாம். 


தினந்தோறும் 15 நிமிடங்கள் செலவிட்டு மேற்சொன்ன 2 தலைப்புகளிலும் உள்ள புத்தகக்கணக்குகளை போட்டுப் பார்த்துப் பயிற்சி செய்தால் பொதுத் தேர்வுக்குள் தயாராகி விடலாம். 


அடுத்து , மீதியுள்ள 10 பாடத் தலைப்புகளிலும் ஒவ்வொரு பாடத் தலைப்பின் இறுதியிலும் ஒரு மதிப்பெண் வினா விடைகள் 20 - 25 எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினா - விடை பகுதிகளை தினமும் படித்து , செய்து பார்த்து சிறு தேர்வு போல எழுதி வந்தால் 15 மதிப்பெண்கள் நிச்சயமாகப் பெற்று விடலாம். இதுவரை குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 க்கு இவை போதுமானது. ஆனால் இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். 


எளிய பகுதியும் ஜூன் மாதம் முதல் மாணவர்கள் திரும்பத் திரும்ப கவனம் செலுத்தும் பகுதி - கணங்களும் சார்புகளும், இதில் எடுத்துக் காட்டு கணக்குகள் ,வெண் படம் , டி மார்க்கன்
கண நிரப்பி , வெட்டு , சேர்ப்பு இவற்றிற்கான சூத்திரங்கள் , கணக்குகள் இவற்றில் பயிற்சி பெறலாம் .


அதனைத் தொடர்ந்து மாணவருக்கு எளிதான பகுதியும் மதிப்பெண் பெறக் கூடியதும் அணிகள் தலைப்பு , இதில் மிக எளிமையான பயிற்சிக் கணக்குகளும் எடுத்துக் காட்டுகளும் உள்ளன. இத் தலைப்பில் சற்று பயிற்சி செய்தால் எளிதில் மதிப்பெண்கள் கூடும். 


இதுவரை நாம் கூறிய தலைப்புகளே 50 மதிப்பெண்களைத் தாராளமாகப் பெற்றுத் தரும் 


அடுத்ததாக ஆயத் தொலை வடிவியல் என்ற தலைப்பில் , பிரிவுச் சூத்திரங்கள் , முக்கோணத்தின் பரப்பு , நாற்கரத்தின் பரப்பு , சாய்வு ,கோட்டின் சமன்பாடுகள் இவற்றைப் பயிற்சி செய்யலாம் .இத் தலைப்பையும் மேற்சொன்ன தலைப்புகளையும் நன்றாகப் பயிற்சி செய்யும் ஒரு மாணவி / மாணவன் எவ்விதத் தடங்கலும் இன்றி 60 மதிப்பெண்கள் வரைப் பெறலாம்.


அடுத்து நிகழ்தகவு , புள்ளியியல் இவ்விரு தலைப்புகளிலும் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகள் , பயிற்சிக் கணக்குகளையும் சேர்த்து தயாராகும் போது 70 மதிப்பெண்களைக் கடந்த நிலையில் வெற்றி பெறலாம். 


அதோடு அளவியல் தலைப்பில் வளை பரப்பு , கனஅளவு , மொத்தப் பரப்பு - கூம்பு , உருளை, கேளம் இவற்றில் பயிற்சி செய்து பார்க்கலாம் , 


அடுத்து வடிவியல் தலைப்பு , இதில் 
பிதாகரஸ் தேற்றம் , தேல்ஸ் தேற்றம் ,எடுத்துக் காட்டுக் கணக்குகள் , வடிவொத்த முக்கோணங்கள் , தொடு காட்டின் நீளங்கள் இதற்கானப் புரிதலும் கணக்குகளும் பயிற்சி செய்தால், இதுவரை உள்ள தலைப்புகள் 
80 மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுத் தரும் .


மீதமுள்ள இயற்கணிதம் , முக்கோணவியல் மற்றும் மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்புகளும் என இம் மூன்று தலைப்புகளும் கூட நல்ல முறையில் பயிற்சி செய்யப்படின் ஒரு மாணவன் / மாணவி 100 மதிப்பெண்களை எளிதாகப் பெற இயலும். 


மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் கணக்குப் பாடத்திற்கு ஒதுக்குவது நல்ல மதிப்பெண் பெற வழி வகுக்கும். ஆம் அந்த நேர உழைப்பு அவர்களுக்குள் வேகத்தையும் தெளிவும் தரும் ,தேர்வை மிக இயல்பாக அணுக முடியும். முதலில் கணக்குப் பாடத்தை விரும்ப வேண்டும். 


ஒவ்வொரு முறை போட்டுப் பார்க்கும் போதும் சிக்கல் தீரும் , என்றுமே கணக்கை மனப்பாடம் செய்யக் கூடாது. படங்கள் ,குறியீடுகள் இவற்றைப் போட்டுப் பார்த்து சுயமாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும் ,


கணக்கின் மற்றொரு சிறப்பு இப்பாடத்தில் மட்டும் தான் சரிபார்த்தல் செய்ய முடியும் , ஆகவே மாணவர் ஒரு கணக்கை தேர்வு விடைத்தாளில் போட்ட பிறகு அதன் வலப்பக்கத்தில் ஏற்கனவே போட்டுக் கொள்ளும் Rough work பகுதியில் சரிபார்த்தல் போட்டுப் பார்ப்பது நல்லது. தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னரே தான் எத்தனை மதிப்பெண் வாங்குவோம் என தெரிந்து விடும். 


ஒவ்வொரு முறை கணக்கைப் போடும் போதும் 3 விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை , என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது ? என்ன கண்டறிய வேண்டும் ? அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் ? இந்த மூன்றையும் யோசித்தால் எந்த ஒரு சிக்கலான கணக்கையும் எளிதாகத் தீர்த்து விடலாம். 


வழிகள் தெளிவாகவும் , எண்களை சரியாகவும் குறிப்பிடப்பட வேண்டும். அளவியல் பகுதி வரும் போது மீ , செ.மீ ,ச.மீ இது போன்ற அலகுகளை மறக்காமல் எழுத வேண்டும் .


பெருக்கல் , வகுத்தல் , சுருக்குதல் செயல்களை ஏற்கனவே கூறியபடி Side work - Rough work என்ற பகுதியில் போட்டுப் பார்த்து தவறில்லாமல் எடுத்து விடைகளை எடுத்து எழுத வேண்டும். 


அடித்தல் ,திருத்துதல் இருக்கக் கூடாது. நேர மேலாண்மையில் பயிற்சி செய்து இருக்க வேண்டும் , கேட்கப்பட்ட வினாக்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகப் போடக்கூடாது. தேர்வு வினாத்தாள் கணக்கு எண்ணை விடைத்தாளில் எழுதும் போதும் மாறாமல் எடுத்து எழுத வேண்டும். கணக்கு எண் போடாமல் கணக்கை விடைத்தாளில் செய்யக் கூடாது. 


அளவுகோல் , பாகை மானி இவற்றைப் பயன்படுத்தும் போது கவனமாக மதிப்புகளைப் போட வேண்டும் , பிழை செய்யக் கூடாது. 


இவ்வாறு ஒரு 10 ஆம் வகுப்பு மாணவர் தன்னை சரியான முறையில் பயிற்சி செய்து கொண்டால் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம். 


கணக்குத் தேர்வைப் பொறுத்தமட்டில் பயமோ பதட்டமோ தவிப்போ அர்த்தமற்றது. எளிதாகக் கையாளலாம் 


ஆசிரியர்கள் :


மாணவருக்கு எங்கெல்லாம் கணக்குப் பாடத்தில் உதவி தேவைப்படுகிறதோ அங்கு சரியான நேரத்தில் வழிகாட்ட வேண்டும் , அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் , அவர்களது நம்பிக்கையைக் குறைக்கும் படி எந்த ஒரு சூழலையும் உருவாக்கி விடக் கூடாது. இதுவே அவர்கள் தேர்வை நம்பிக்கையுடன் பயமின்றி அணுக உதவும். 


பெற்றோர் :


தங்கள் குழந்தைகளை உடல் , மன ரீதியாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு நேர்மறை வார்த்தைகளை அவர்களுடன் கலந்து பேச சூழல் தர வேண்டும். 
நம்பிக்கை வளர அவர்களை வழிகாட்ட வேண்டும். 


இவ்வாறு ஆசிரியர் , பெற்றோர் , மாணவர் தங்களை தகவமைத்துக் கொண்டால் கணக்குப் பாடத் தேர்வு மட்டுமல்ல எல்லாப் பாடத் தேர்வுகளுமே அவர்களுக்கு மிக எளிதே


உமா.


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022