மெட்ரோ ரயிலில் ரூ.2500க்கு டூரிஸ்ட் கார்டு திட்டம்
பயணிகளின் வருகையை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயிலில் 30 நாள் பயணம் செய்யும் வகையில் ‘டூரிஸ்ட் கார்டு’ திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மெட்ேரா ரயிலில் தினம் தோறும் 80 முதல் 90 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில், மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்க ‘30 நாட்கள் டூரிஸ்ட் கார்டு’ என்ற ஒரு புதிய திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, டூரிஸ்ட் கார்டுக்கு(சுற்றுலா அட்டை) ரூ.2,550ஐ பயணிகள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ₹50 திரும்ப பெறலாம். ரூ.2,500 திரும்பி அளிக்கப்படாது. 30 நாளுக்கான கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், ‘30 நாட்கள் டூரிஸ்ட் கார்டு’ அட்டையை பெற்றுகொண்ட பயணிகள் 30 நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்.
கார்டை அதற்கான இயந்திரத்தில் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த சுற்றுலா அட்டையின் செயல்திறன் 6 மாதங்கள் ஆகும்.
மேலும், இந்த திட்டம் குறித்த விவரங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஒட்டியுள்ளது.