என்ஜினீயரிங் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எவ்வளவு? அரசு ஆணை வெளியீடு
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அரசு ஆணையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஏற்கனவே பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (பி.சி.எம்.) பிரிவினருக்கு 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு (எம்.பி.சி.) 40 சதவீதமும், எஸ்.சி.ஏ., எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 35 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து, புதிய தகுதி மதிப்பெண்களை உயர்கல்வி துறை நிர்ணயம் செய்து அரசு ஆணையாக வெளியிட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி, என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளான பி.இ., பி.டெக்கில் சேருவதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 45 சதவீதமும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அடிப்படையில் தான் 2019-2020-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணில், பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் ஏற்கனவே இருந்த மதிப்பெண்ணில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருந்த மதிப்பெண்ணில் இருந்து 5 சதவீதம் மதிப்பெண் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.