சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு - நாசாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு பொறியாளர்
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் நாசாவுக்கே வழிகாட்டிய பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர்.
இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2- விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தரை இறங்கியது.
ஆனால் விக்ரம் லேண்டருடனான தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டது. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சந்திரயான் -2 ஆர்ப்பிட்டரானது தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்தது.இதனிடையே விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்துள்ளது.
விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா ஏற்கனவே செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் படம் பிடித்தவற்றை ஆராய்ந்த சண்முக சுப்பிரமணியன், அதன் சிதைந்த பாகங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பி வைத்தார்.
இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின் படி விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தது.
தற்போது சண்முக சுப்பிரமணியன் மூலம் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் பகுதிக்கு S என நாசா குறியீடு செய்துள்ளது.